கூட்டணித் தலைவராக கருவை நியமிக்க ரணிலிடம் கோரிக்கை!

எதிர்வரும் 5ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி அறிவிக்கப்படும்போது சபாநாயகர் கரு ஜயசூரியவை அதன் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

அதேசமயம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக இறக்குவதற்கும், அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்து அவர் பொதுவான ஒருவராக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் ரணிலிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட அரசியல் நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய அதனைக் கையாண்ட விதம் குறித்து சர்வதேச இராஜதந்திர மட்டங்களில் பெரும் வரவேற்பு இருப்பதாலும், உள்நாட்டிலும் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளிடம் கருவுக்குச் செல்வாக்கு இருப்பதாலும், எல்லாவற்றுக்கும் மேலாக பெளத்தபீடங்களின் ஆதரவு ,இனவாதச் சிந்தனையில்லாத அவரின் செயற்பாடுகள் என்பவற்றைக் கருத்தில்கொண்டு அவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் ரணிலிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியுடன் பேச்சு நடத்தப் பிரதமர் தீர்மானித்துள்ளார் என அறியமுடிந்தது.இதற்கிடையில் சஜித் ஆதரவாளர்களான எம்.பிக்கள் பலர் ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவான பிரசாரப் பணிகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *