காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிய 38 உறவுகள் இதுவரை பரிதாபச் சாவு!

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிய 38 உறவுகள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு – கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“வடக்கு – கிழக்கில் காணாமல்போனோரைக் கண்டறிந்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்பு இதுவரை 38 பேர் தமது உயிரை இழந்து விட்டனர். இருப்பினும் காணாமல்போன எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை. நீதி வழங்கலில் ஏற்படும் தாமதமே இந்த அவல நிலைக்குக் காரணம்.

கிளிநொச்சியில் இதுவரை கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு, மரியான் சரோரூபன் குருஸ், கனகரத்தினம் மகேஸ்வரி, வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி ஆகிய 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகிய 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி, இராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி ஆகிய 7 உறவுகள் இறந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரசேகரம் ஞானசௌந்தரி ஆகிய 6 உறவுகள் இறந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமிதம்பி திரவியம் ஆகிய 5 உறவுகள் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி ஆகிய இருவரும் இறந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாசிலாமணி புஸ்பராணியும் மன்னார் மாவட்டத்தில் ஜசிந்தா பீரிஸூம் உயிரிழந்துள்ளனர்.

இவை எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடுகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *