குருணாகல் வைத்தியர் ஷாபி பிணையில் இன்று விடுவிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபி இரண்டு மாதங்களின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டடார்.

குருணாகல் நீதிமன்ற நீதிவான் சம்பத் ஹேவாவசத்தால் இரண்டரை இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

இன்று அவர் குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு எதிரான கோஷ்டியினர் பெருமளவில் குழுமியிருந்தனர். குருணாகல் நகரிலும் அவருக்குப் பிணை வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்திலும் குருணாகல் நகரிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. மாலை 5.45 மணிக்குப் பிணை தொடர்பான முடிவை நீதிவான் அறிவிப்பதாக இருந்தது. ஆனால், அது ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது.

வைத்தியார் ஷாபியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் பிணை கோரி நின்றபோதும் எதிராளிகள் சார்பில் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஷாபியை பிணையில் விடுவிக்க அரச சட்டவாதிகள் எதிர்ப்பை வெளியிடவில்லை.

வைத்தியர் ஷாபி, கடந்த மே மாதம் 24ஆம் திகதி இரவு மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை, அந்த நிதியூடாக சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் தனித்தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாமையால் வைத்தியர் ஷாபி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *