உயர்வு தாழ்வு பார்க்கும்படி புத்த பகவான் கூறவில்லை! – அனைத்து மக்களையும் சமமாக மதித்து ஆட்சி அமைப்பேன் என சஜித் முழக்கம்

“யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன்: செய்வேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கருதப்படுபவருமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக எடுத்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை நான் வழங்குவேன்.

அனைவரும் ஐக்கிய இலங்கை, ஒன்றிணைந்த இலங்கை, தேசியப் பாதுகாப்பு என்றெல்லாம் பேசுகின்றனர். இப்படியாக ஐக்கிய இலங்கையை நோக்கி, ஒன்றிணைந்த இலங்கையை நோக்கி நாங்கள் நகரவேண்டுமானால் எங்களுக்குள் நாங்கள் சில விடயங்களைக் களையவேண்டும். சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்குள்ளாக நாங்கள் அனைவரும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்லவேண்டும். எங்களுக்குள்ளாக மதங்கள், ஜாதிகள், நிறங்கள் போன்றவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும். நாங்கள் அனைவரும் இலங்கையினுடைய குடிமக்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படவேண்டும்.

இந்த அரசு எம்மை இரண்டாம் தரப்பாகவே நடத்துகிறது, இரண்டாம் தரப்பாகவே நேசிக்கிறது என்று சிலர் எண்ணுகின்றனர்: கதைக்கின்றனர். இது தவறாகும். இவ்வாறான எண்ணங்கள் சிலரால் திட்டமிட்டு ஊட்டப்படுகின்றன. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.

நான் ஒரு சிறந்த பௌத்தன். பௌத்த மதத்தினுடைய கோட்பாடுகளைச் சரியான முறையில் கடைப்பிடிக்கின்றேன். யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன்: செய்வேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *