சீரற்ற காலநிலையால் 7 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் முழுமையாகவும், 703 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. .

இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்பிராந்தியங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக இலங்கையைச் சேர்ந்த சுமார் 30 நீண்டநாள் ஆழ்கடல் படகுகள் மாலைதீவு கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த படகுகள் மாலைதீவு கரைக்குச் செல்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேர குறிப்பிட்டுள்ளார்.

கடலலையில் சிக்குண்டு சென்றுள்ள படகுகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும், படகிலுள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளனவா என்பது குறித்து கடற்படையினருடன் இணைந்து சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *