மரணதண்டனையை நீக்கும் தினத்தை தேசிய துக்கதினம் என அறிவிப்பேன்! – மிரட்டுகின்றார் மைத்திரி

“மரணதண்டனையை நீக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் வாய்ப்பாக அமையும். அவர்களிடத்தில் நாட்டை ஒப்படைப்பதாகவும் அமையும். அப்படி ஏற்பட்டால் அந்தத் தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக அறிவிப்பேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று முற்பகல் வளவை வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மரணதண்டனையை நீக்குவதற்கு அரசில் உள்ள சிலரின் தேவையின் பேரில் நாடாளுமன்றத்தில் சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதன் மூலம் வெற்றியடைவது நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமே.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த நாட்டின் இளம் தலைமுறையினரது எதிர்காலத்தை சீரழிப்பதற்கு நான் இடமளிக்க போவதில்லை.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். மரணதண்டனை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

மரணதண்டனை நாட்டுக்கு அவசியமானது. நாட்டையும் இளந்தலைமுறையினரையும் நேசிக்கின்றவர்கள் மத்தியில் விரிவான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நோக்கத்திற்காக ஒன்றிணையுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *