கல்முனைத் தொகுதி விடயத்தில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு!

கிழக்கு முஸ்லீம்களின் முகவெற்றிலை கல்முனையே என மறைந்த மாதலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்ன கருத்தில் பல விடயங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளது.

இங்கு ஆரம்பத்தில் நான்காக காணப்பட்ட சபைகளானது, கல்முனை மாநகர சபையாக மாற்றப்பட்டதன் பின்பு மர்ஹும் அஷ்ரபின் காலத்திலேயே சாய்ந்தமருது பிரதேச சபையானது பிரித்து தரப்படல் வேண்டுமென சிலரால் கேட்கப்பட்ட போது “பிரதேச சபைகளாக, மீண்டும் மாநகர சபையினை பிரித்தால் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையானது தளர்ந்து விட வாய்ப்புள்ளது. இதே கட்டமைப்பின் ஊடாகவே எதிர்கால முஸ்லிம்களது இலக்கினை அடைந்துகொள்ள, கல்முனை மாநகர சபையினை மத்தியமாகக் கொண்டு தான் நாம் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால் நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுமாயின் பிரதேச செயலகத்தினை செயற்படுத்தலாம்” என அன்றே மர்ஹும் அஷ்ரப் தெளிவாக விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

ராஜிவ் காந்தி, ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, வரதராஜ பெருமாளும் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்ட காலத்தில் காணப்பட்ட இறுக்கமான சமூக கட்டமைப்பானது, முஸ்லீம்களை கொத்தடிமைகளாக மாற்றும் வரை கொண்டு செல்லும் தன்மையினை காண்பித்து அச்சமான மனநிலையினை முஸ்லீம்களுக்கு மத்தியில் இவ்விணைப்பு ஏற்படுத்தியிருந்ததால், இவ்வச்சத்திலிருந்து விடுபட ஐக்கிய ஸ்ரீலங்காவிற்குள்முஸ்லீம் தேசியமெனும் சுயாட்சி அடையாளத்தினைப் பெற்றால் மாத்திரமே கிழக்கில் திருப்தியாக வாழ முடியும் என்ற மர்ஹும் அஷ்ரபின் தூரநோக்கு சிந்தனைக்கு ஏற்ப, அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கொள்கைகள் வேதவாக்குகளாக கிழக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் வழியில் பயணங்கள் தொடர்ந்தன.

வடகிழக்கு இணைப்போ, கரையோர மாவட்டக் கோரிக்கையோ, கிழக்கில் இரு சமூகத்தவராலும், கல்முனைத் தொகுதியை மையமாகவைத்தே அணுகப்பட்டன என்பது திடமே. ஆனால் கல்முனை மாநகர சபையாக மாற்றப்பட்ட நிகழ்வுக்குப் பின், தமிழ் தரப்பினர் முறையாக அனுமதி பெறப்படாத உப பிரதேச செயலகம் ஒன்றினை ஏதோ ஒரு வழியில் அமைத்துக் கொள்ளத் தவறவில்லை என்று கூறுவதில் தவறுமில்லை.

கல்முனை வடக்கில் தமிழ் சமூகத்துக்கு தரமுயர்த்தி சபை அமைக்க அனுமதி வழங்கப்பட்டால், அங்கு காணப்படும் வளங்களுடன் இணைந்த முஸ்லிம்களது ஒருமித்த சக்தியானது சிதறடிக்கப்பட்டு பலவீனமாக்கப்படுவதோடு, இப்பலவீனத்தை தமிழர் தரப்பு தங்களது பலமாக கையாண்டு, ஏனைய தமிழர் தரப்பு சபைகளையும் உள்ளடக்கியதாக ஒரு தோன்றா வட்டத்தினை அமைத்து, வடகிழக்கு இணைப்புக்கு கிழக்கில் ஒரு அடித்தளத்தினை அமைத்துக் கொடுக்க இது வசதியாக இருக்கும்.

இரு கைகளும் தட்டினால் தான் சத்தம் வரும் என்பது போல், தட்டுவதற்கு வடக்கு தயாராக உள்ளது. கிழக்கும் தயாராகி விட்டால் இணைப்பு என்ற சத்தம் வந்து விடும். இதற்கு கிழக்கில் தமிழர் தரப்பு தங்களை தயார்படுத்துவதற்காக சகல ஏற்பாடுகளையும் சில தரப்பினரின் உதவிகளோடு மேற்கொண்டாலும், அதையும் தாண்டி முஸ்லீம்களின் அதிகாரவரம்பானது குறைக்கப்படல் வேண்டுமாயின், கிழக்கில் முஸ்லீம்கள் துண்டாடப்படல் வேண்டும் என்ற யுக்தியும் இங்கு அமுலில் உள்ளது.

இதன்படி கிழக்கில் நாவிதன்வெளி, காரைதீவு, வாழைச்சேனை போன்று இன்னும் சில பிரதேச சபைகள் தமிழ் தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல், கல்முனை வடக்கு பிரதேச சபையிலும் இச்சமன்பாட்டுக்கு அமைவாகவே காய்கள் நகர்த்தப்படுகின்றன. கல்முனை மாநகர சபையாக மாற்றப்பட்ட போது தமிழ் தரப்பினரிடமிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட பிரதேசத்தினை விடவும், அதிகமான நிலப்பரப்பினை கொண்ட நிலத்தொடர்பற்ற, முஸ்லீம்களின் அனைத்து வளங்களையும் கொண்ட பிரதேசத்தினை உள்ளடக்கிய பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தித் தர வேண்டும் எனக் கோருவது முஸ்லீம்களின் அடிமடியில் கை வைப்பதனை தெளிவாக்கக் காட்டுகின்றது.

சிங்கள, தமிழ் மக்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வு, நல்லிணக்கத்துடனான ஒற்றுமை காணப்படுவதனை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கின்றோம். ஆனால் எமது நாட்டில் அமைச்சரவை, பாராளுமன்றம், சட்ட விதிமுறைகள், யாப்புக்கள், நீதிமன்றம் என பல கட்டமைப்புக்கள் காணப்பட்டும் அதன் வழி செல்லாது அகிம்சையெனும் பெயரில் பலாத்காரத்தின் ஊடாக தூண்டிப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு, சமூகத்தேவைகளை நிவர்த்தி செய்யும் தோரணையில் எதோ ஒன்றை சாதிக்க முனையும் இப்போராட்ட நடவடிக்கைகளானது எந்தளவு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும், முஸ்லீம் சமூகத்துக்கும் பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்பதனை நன்கு தெரிந்தும் தெரியாதபடி பாசாங்கு செய்பவர்கள்உடனடியாக இந்நாடகத்தை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். இல்லையேல் சகலரும் அதே பொறியில் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

தலைக்கு மேலால் வெள்ளம் போன கதையாக அதிகரித்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த சாய்ந்தமருத்து மக்கள் இன்று தனியான சபை வேண்டுமென மொத்த ஊரும் ஒத்த குரலில் கேட்டு நின்றதற்கும், இவ்வாறான ஒரு நிலைக்கு வந்ததற்கும் பல நாகரீகமற்ற அரசியல் குளறுபாடுகளுடைய பின்னனிகளே காரணமாக அமைந்தன. இந்த முடிவு காணமுடியாத சிக்கல் நிலையானது கிழக்கு முஸ்லீம்களுக்கு சரியான ஒரு தலைமைத்துவம் இல்லை என்பதனை உறுதிப்படுத்துவதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் முஸ்லிம்களது பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முஸ்லீம்களையே ஆயுதமாக கையாண்டு, இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டிருக்கும் செயற்பாடுகளை இன்று நேரடியாகவே காணக்கூடியதாக உள்ளது.

இது போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளானது கல்முனைத் தொகுதியில் தொடங்கி அது முழுக் கிழக்கிலும் பரவி, கிழக்கு முஸ்லீம்களின் ஒன்றிணைந்த சக்தியானது சிதறடிக்கப்பட்டு பின்னர் அது விட்டகுறை தொட்டகுறையாக தொடர்ந்து சென்று, இனப் பிரச்சினைக்கான தீர்வு என வரும் போது நிலத் தொடர்பற்ற கரையோர மாகாணம் அல்லது கரையோர மாவட்டம் என்பது “இருக்கு ஆனால் இல்லை” என்று சொல்லுமளவிற்கு மாறிச் சுருங்கி கீழாகிவிட. வடகிழக்கு இணைப்புக்குரிய சாதகமான சந்தர்ப்பங்கள் விரிந்து மேலாகிவிடும். பின்னர் முஸ்லீம்களின் கெதி அதோ கெதிதான்.

பிரதேச சபைகள் முதல் மாகாணசபை வரை சகல ஆட்சியினையும், அதிகாரத்தினையும் தன்வசம் கொண்டுள்ள தமிழ் சமூகம், முஸ்லீம்களிடம் இருப்பதையும் பிடுங்கி நசுக்க நினைப்பது ஒரு முறையான செயற்பாடாக தெரியவில்லை. அம்பாறை மாவட்டத்துடன் பல சிங்கள குடியேற்றங்கள், கிராமங்கள் தொடர்ந்தேச்சையாக இணைக்கப்பட்டு முஸ்லீம்களின் பரம்பல் விகிதாசார ரீதியாக குறைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் தரப்பும் உள்ளார்ந்த ரீதியாக துணை நின்று செயல்பட்டதையும் மறுக்க முடியாது. மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு வரும் தீர்வானது மாவட்டத்தையும் இல்லாமல் செய்வதோடு கிழக்கு முஸ்லீம்களை ஓரிரு தொகுதிகளுடன் மட்டுப்படுத்தும் வகையில், கட்டிப் போடுவதற்கு இவ்வணுகுமுறை இலகுவாக வழியமைத்து கொடுக்கும்.

வடகிழக்கில் முஸ்லீம்களை விட தமிழ் சமூகம் தன் வசம் அதிகமான அதிகாரங்களை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் இந்நிலையில், பெரும் பன்மைச் சமூகம் தமிழ் மக்களுக்கு செய்த அதே அடக்கு முறையினை முஸ்லீம்கள் மீது தமிழ் சமூகம் செய்ய முனையக் கூடாது. முஸ்லீம்களை அவர்கள் வழியில் வாழ வழி விட வேண்டும். இன்று வரை தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை முஸ்லீம்கள் பிழை என்று சொன்னது கிடையாது . முஸ்லிம்களது தேசியத்தினை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்ற சிலர், தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் சீராக உள்ள ஒற்றுமையினை பிரிக்க முனைவதன் மூலம், முஸ்லிம்களது தேசியத்தினை இல்லாமல் செய்யலாம் என்பதற்கு மேலாக, வடகிழக்கு இணைப்புக்கு அதுவே தடையாகவும் அமையலாம் என்பதனையும் மறந்து விடக்கூடாது. இரு சமூகத்தவரும் பயன் பெரும் வகையில் சேர்ந்துதான் இதனை அமைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, தனித்தனியாக அமைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.

ஒன்றைத் தடுத்து ஒன்றைப் பெரும் அரசியலை ஒரு நாளும் செய்திடாத மர்ஹும் அஷ்ரப் இருந்திருந்தால் சகலரையும் அழைத்து, விடயங்களை பக்குவமாக எடுத்துரைத்து பிரிவினை என்ற சொல்லினையே இல்லாமல் செய்திருப்பார். ஆனால் இதற்கு மாற்றமாகவுள்ளது இன்றைய “ரோபோ” தலைமைகள்.

தமிழ் சமூகம் பலரின் பலமான உதவியுடன் செய்ய எத்தனிக்கும், கல்முனைத் தொகுதியில், கல்முனை வடக்கு எனும் பிரதேச சபை மூலமாக முஸ்லீம்களை துண்டாடும் தந்திரோபாய நிகழ்ச்சித் திட்டத்துக்கு, மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்க் கூட்டமைப்பு என்பவற்றுடனான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் கடும் உறவும், அது தொடர்பான அவரது மௌனமும் எதற்கும் சம்மதம் என்ற அர்த்தமுள்ளமுஸ்லீம் சமூகத்துக்கு மாற்றமான கருத்தினையே கொடுத்தாலும். கிழக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சகோதர தமிழ் சமூகத்துடன் நல்லிணக்க அடிப்படையில் சகலரது பிரச்சனைகளும் தீர்வதனையே விரும்புகின்றோம், இதற்கான எங்களது சமாதானக் கதவுகள் என்றும் திறந்தே உள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமென்று வரும் போது, முஸ்லீம்களுக்கென கிடைக்கப் பெறுகின்ற நிர்வாகப் பிரதேசத்துக்கு கல்முனையையே பிரதான தளமாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டி இருப்பதனாலும், அதுவே எமது இருப்பினை தீர்மானிப்பதனாலும் நாம் சகலரும் ஒன்றிணைந்து கல்முனைத் தொகுதியினை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது மிகத்தெளிவு.

– ஐ.எம்.ஹாரிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *