நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது! – நாடாளுமன்றில் நினைவுகூர்ந்தது கூட்டமைப்பு

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“1995ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் 147 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும். அதே நவாலிப் படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்றாகும்.

நவாலியில் தமிழ் மக்கள் உடல் சிதறித் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டமை, அங்கு இரத்த ஆறு ஓடியமை ஐ.நாவிலும் உலக அளவிலும் பதியப்பட்டுள்ளது. அந்தத் துன்பத்தை இன்று நான் சபையில் நினைவுகூருகிறேன். அப்படியான பல இழப்புக்களைக் குறிப்பாக உயிரிழப்புக்களைத் தமிழினம் ஒருபோதும் மறக்காது.

அப்படியான இனப்படுகொலைகளுக்கு இன்றுவரை நீதியில்லை. எல்லோரும் அதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்” – என்றார்.

இதேவேளை, நவாலிப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *