உண்மைத் தாற்பரியத்தை எடுத்தியம்பும் மனித உரிமை கண்காணிப்பக அறிக்கை! – வரவேற்கின்றார் நஸீர்

“முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகக் கைதுசெய்யப்படுவது உட்பட அவர்களுக்கு எதிரான அனைத்து
துஷ்பிரயோகங்களையும் இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். தற்போதைய சூழ்நிலையின் உண்மையான தாற்பரியத்தை இந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளமை பாராட்டுக்குரியது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பௌத்த தேசியவாதிகளால் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறித்தும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் ஏனைய துஷ்பிரயோகங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் கும்பல்களின் வன்முறைகள், அந்தச் சமூகத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், ஒடுக்குமுறைகள் குறித்து அரச அதிகாரிகள் துரிதமாக முடிவைக் காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு பெருமளவானவர்கள் அரசு தான் நீக்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதியளித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், மனித உரிமை துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியிருப்பது முஸ்லிம் மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களில் அரசு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தொடர்ந்தும் இனவாத சக்திகளின் நெருக்குவாரங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்றபோதும் இனக்குரோதங்களைத் தூண்டும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் இவற்றை நிறுத்த ஆரோக்கியமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்’ நோக்கோடு அரசு செயற்படுகின்றதா என்ற எண்ணம் தற்போது முஸ்லிம் சமூகத்தின் மனங்களில் ஏற்பட்டு வருகின்றது. இந்த எண்ணத்தை நீக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *