வடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை! – மாவை எம்.பி. தெரிவிப்பு

“யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தடையாக உள்ளார் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருப்பாராயின் அவர் வரலாறு தெரியாதவர்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

பலாலி விமானத் தளத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றும் அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்றுப் பலாலியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீமெந்து தொழிற்சாலை தொடர்பாக இன்று ஒரு செய்தி பார்த்தேன். சீமெந்துத் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் சொன்னார் என்று கேள்விப்பட்டேன். பத்திரிகைச் செய்தி சரியோ பிழையோ தெரியாது. ஆளுநர் அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு வரலாறு தெரியாது என்றே நினைக்கின்றேன்.

2016ஆம் ஆண்டு புதிய ஆட்சி வந்ததன் பின்னர் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கலுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வந்திருந்தார். அப்போது பலாலி விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று நாம் கேட்டிருந்தோம். தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். இந்தியா அதைச் செய்து தரவேண்டும் என்றும் கேட்டிருந்தோம். இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் அடுத்ததாக நாங்கள் எடுத்த தீர்மானம் சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான்.

சீமெந்து தொழிற்சாலை மிக மோசமாக அழிக்கப்பட்டிருக்கின்றது. அதை மீண்டும் இயங்க வைப்பதில் எமக்குப் பாதகங்கள் பல இருக்கின்றன. ஏற்கனவே நிலத்தடி நீர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுண்ணாம்புக் கற்களை அகழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதைக் கூறியிருந்தோம்.

கிளிநொச்சி கிராஞ்சியில் நிலம் ஆராயப்பட்டது. இப்போது மன்னாருக்குச் செல்கின்ற வழியில் மடுமாதாவுக்கு மேற்குப் பக்கமாக பரப்புக்கடந்தான் எனும் இடத்தில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்காகச் சுண்ணாம்புக் கற்பாறைகள் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சீமெந்துத் தொழிற்சாலைக்குரிய நிலம் கிட்டத்தட்ட 330 ஏக்கரில் தொழில் மையத்தைத் சார்ந்த துறைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவைக்குப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. கடற்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் ஒரு தொகுதி நிலம் வேண்டும் என்றபோது அதை அடையாளம் காட்ட வேண்டும் என்று அந்த அமைச்சரவைப் பத்திரத்திலே நாங்கள் கேட்டிருக்கிறோம். அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது.

நாங்கள் சீமெந்து தொழிற்சாலையைத் தொடங்குவதற்குத் தடையாக இருக்கின்றோம் என்பது உண்மையல்ல. ஆளுநருக்குத்தான் வரலாறு தெரியாமல் இருக்கின்றது” – என்றார்.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் பாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துரையாடலில் வடக்கு மாகாண பொருளாதாரம் பற்றி ஆராயப்பட்டது. சிவில் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் காங்கேசன்துறைச் சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஆளுநர் தான் அதை ஆரம்பிப்பதற்குத் தயாராக உள்ளேன் என்றும், அதை ஆரம்பிக்க விடாது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தடையாக உள்ளார் எனவும், அவரிடம் போய்க் கேளுங்கள் என்று ஆளுநர் கூறியிருந்தார் எனவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *