குற்றவாளிகளைத் தூக்கிலிட ஒக்டோபர் 30 வரை இடைக்காலத் தடை! – மைத்திரியின் முடிவுக்கு எதிராக சுமந்திரன் வாதிட்டதையடுத்து உயர்நீதிமன்றம் கட்டளை

குற்றவாளிகளைத் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் கட்டளையிட்டது.

தூக்குத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் சட்டவாளர் கே.எச். லியனகே தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தூக்குத்தண்டனையை நடைமுறைப்படுத்துவது, அரசமைப்பில் நிறுவப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கும் என்று மனுதாரரின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார்.

இந்த மனுவில் சட்ட மா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளை ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், ஒக்டோபர் 30ஆம் திகதி வரை போதைப்பொருள் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கியது.

இதேவேளை, நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் ஆணையில் ஜனாதிபதி கையெழுத்திட்டதை அடுத்து, தூக்குத்தண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதும் நேற்று விசாரணை இடம்பெற்றது. அதன்போது தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் ஆணை ஜனாதிபதியிடமிருந்து சிறைச்சாலை ஆணையாளருக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தூக்குததண்டனைக் கைதிகள் எவருக்கும் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சட்டமா அதிபர் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *