இலங்கையை வீழ்த்தி இந்தியா பெரு வெற்றி! – ரோகித் சர்மா 5ஆவது சதம் அடித்து சாதனை

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் கருணாரத்ன 10 ஓட்டங்களிலும் , குசல் பெரேரா 18 ஓட்டங்களிலும் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 3 ஓட்டங்களிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திரிமன்னே நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைச்சதத்தைப் பதிவு செய்தனர்.

இதில் திரிமன்னே 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த தனஞ்ஜெயா டி சில்வா, மத்யூஸுடன் கைகோர்க்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மேலும் உயர்ந்தது. தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம், அணியைச் சரிவிலிருந்த மீட்டு சதம் அடித்து அசத்திய மத்யூஸ் 128 பந்துகளில் 113 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திசிரா பெரேரா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களை எடுத்தது.

தனஞ்ஜெயா டி சில்வா 29 ஓட்டங்களுடனும் , இசுரு உதனா ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுக்களும், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில், லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆரம்ப ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடி தங்களது அரைச் சதத்தைப் பதிவு செய்து அசத்தினர். அந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த ரோகித் சர்மா உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் தனது 5ஆவது சதத்தைப் பதிவு செய்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககரா (4 சதங்கள்) சாதனையை முறியடித்தார்.

பின்னர் ரோகித் சர்மா 94 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன், அணித்தலைவர் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விரைவாக ஓட்டங்கள்சேர்க்க, இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது. இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த லோகேஷ் ராகுல் தனது சதத்தை பதிவு செய்தநிலையில், 111 (118 பந்துகளில்) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 4 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 34 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 7 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 43.3 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக உதானா, கசுன் ரஜிதா மற்றும் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *