பொலிஸாரின் பிஸ்டல் பறிப்பு! – மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பில் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி அடையாளம் தெரியாத ஒருவரால் இன்று பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கீழுள்ள புதுநகர், திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் இன்று முற்பகல் 11 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவ்வேளை, மோட்டார் சைக்கிளில் இருவர் தலைக்கவசமின்றி வவுணதீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்ப முயன்றபோது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் அங்கு ஒன்றுதிரண்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதன்போது​ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை அடையாளம் தெரியாத ஒருவர் பறித்துத் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது வவுணதீவுக் களப்புப் பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைதுசெய்தனர்.

இதேவேளை, புதூர் மற்றும் வவுணதீவுப் பகுதிகளில் இருந்து மேலதிகமாக இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *