நகுலேஸ்வரத்தில் காணி அளவீடு மீளளிப்புக்கா? சுவீகரிப்புக்கா? – மாறுபட்ட தகவல்களால் குழப்பம்

“யாழ். மாட்டம், கீரிமலை, நகுலேஸ்வரத்தில் உள்ள 62 ஏக்கர் காணிகள் நாளை அளவீடு செய்யப்படஇருப்பது காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காகவே. ஆனால், ஊடகங்கள் பொய் கூறுகின்றன” என்று தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.

ஆனால், இந்த அளவீடு காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாக நில அளவைத் திணைக்களத்தால் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகுலேஸ்வரம் கிராமத்தில் உள்ள 62 ஏக்கர் காணியை சுற்றுலா விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக சுவீகரிப்புச் செய்யும் நோக்கத்தோடு அளவீடு செய்யப்படஉள்ளது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/226 கிராம அலுவலர் பிரிவான நகுலேஸ்வரம் பகுதியில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி மாளிகை ஆடம்பரமாக அமைக்கப்பட்டது. அந்த மாளிகை உட்பட 62 ஏக்கர் நிலப்பகுதி கடற்படையினரின் தமது கட்டுப்பாட்டிலேயே தற்போதும் வைத்துள்ளனர். அந்தப் பிரதேசம் விடுவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

அங்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி அந்தப் பகுதியை விடுவிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்த மாளிகையைச் சுற்றுலாத் திணைக்களத்துக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நாளை இந்தக் காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன என்று காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நேற்றுக் காணி உரிமையாளர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவனுக்கும் இடையே சந்திப்பொன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் கலந்து கொண்டிருந்தார்.

கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கலந்துரையாடல் முடிவுற்றதும் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

“நாளை வியாழக்கிழமை வலிகாமம் வடக்கில் காணிகள் அளவிடப்படவுள்ளன. மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் காட்டுவதன் மூலம் அந்தக் காணிகள் அளவிடப்படவுள்ளன. உரிமையாளர்கள் தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களுக்குத் தங்களுடைய இடங்கள் எவை என்பது தெரியாமல் இருக்கும். சிலவேளைகளில் மக்களின் காணிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கலாம். முதல்கட்டமாக 62 ஏக்கர் காணியை அளந்து அந்தக் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளோம். இந்தப் பகுதி 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மஹிந்த மாளிகை வரையான முதல் பகுதியே தற்போது அளக்கப்படவுள்ளது. அதிலுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களிடம் மீளளிக்கப்படும்.

அடுத்தது மஹிந்த மாளிகை அமைந்துள்ள சுமார் 17 ஏக்கர் பகுதி. அதற்கடுத்தது ஆலயமும் சமாதிகளும் அமைந்துள்ள பகுதி. இந்தப் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் சம்மதித்தால் இந்தப் பகுதியை கலாசார நிலையமாக மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைசிப் பகுதி கடற்படையினர் தொடர்ந்தும் முகாமிட்டுள்ளனர்.

மஹிந்த மாளிகை அமைந்துள்ள பகுதியில் உள்ளடங்கும் தனியார் காணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையெனில் அந்தக் காணி உரிமையாளர்கள் அந்த மாளிகையை நிர்வகிக்கும் நிர்வாகத்துக்குள் வரலாம். மக்களுடன் இணைந்துதான் நான் இதைச் செய்திருக்கின்றேன். மக்களுடன்தான் அந்தக் காணியை அளவிடப்போகின்றோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, காணி அளவீடு தொடர்பாக அரச நில அளவையாளரால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவின்படி நில அளவையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் கையொப்பமிட்டிருக்கும் அரச நில அளவையாளர் இ.றி.லோகதீபன் ஆகிய நான் அவசியமான ஆளணியினருடன் வட மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இல ஜே/226 நகுலேஸ்வரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நகுலேஸ்வரம் கிராமத்திலுள்ள 62 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியினை சுற்றுலா விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காகச் சுவீகரிப்புக்கான அளவீடுப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி (2019.07.04) 9 மணியளவிலும் தொடர்ந்து வரும் நாட்களிலும் அக்காணிகளுக்குள் பிரவேசிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன் என்பதைத் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

இந்த நில அளவைச் செயற்பாடானது கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி (2019.03.22) 9 மணியளவிலும் தொடர்ந்துவரும் நாட்களிலும் முன்னெடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் குறித்த தினத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாக வேலைத்திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு

காணிகள் புற எல்லைகள் அற்றுக் காணப்படுவதால் ஒவ்வொரு காணி உரிமையாளரும் தத்தமது காணிகளின் புறஎல்லைகளைத் தெளிவாக கூனி அடித்துக் காண்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *