நாடு அமைதிக்குத் திரும்பினால்தான் அரசின் திட்டங்கள் வெற்றியடையும்! – நஸீர் சுட்டிக்காட்டு

“உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் ஸ்தம்பிதம் அடைந்திருந்த சுற்றுலாத்துறையை உயிர்ப்பிக்க அரசு, 1.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி, உதவித் திட்டங்களுடன் அபிவிருத்திகளையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் புதிய திட்டங்கள் பலவற்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளது. அரசின் இந்த வெள்ளை ஜுலை நடவடிக்கையை நாம் பாராட்டுகின்றோம். இதேவேளை, ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களது இழப்புகளுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் சாதாரண நிலையிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வர விரும்புவர். இந்தநிலை இல்லையெனின் அவர்களது வரவு குறையும். இதனால் நமது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

எனவே, நாட்டில் சாதாரண நிலை நிலவ வேண்டியது முக்கியமானது. ஆனால், தற்போதுள்ள நிலையில் சாதாரண நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழவே செய்கின்றது.

முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கோதாவில் உண்மைகளுக்குப் புறம்பான பல விடயங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டதையும், அவை பல்வேறு திக்குகளில் நகர்த்தப்பட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை எற்படுத்த வழிவகுத்திருந்ததையும் சமகாலங்களில் நாம் கண்டுகொண்டோம். அதேபோன்ற நிலைமைளே தொடர்ந்தும் இருந்து வருகின்றன.

இலங்கையின் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்குப் பல்வேறு பிரிவுகள் மற்றும் நபர்கள் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றனர். பாரிய ஹோட்டல்கள் போன்று சிறிய நிறுவனங்களும் பங்களிப்புச் செய்து வருகின்றன. இத்துறை சார்பில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் கணிசமான அதிகளவில் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கில் இவை அதிகளவில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைக்கும் வகைளில் அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கும் பேதங்கள் பார்க்கப்படுமாயின் அரசு தற்போது எடுத்திருக்கும் நோக்கம் உரிய இலக்கை எட்டுவது கடினம்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய அதிகரிப்பு மற்றும் சமுர்த்தித் திட்ட விரிவாக்கம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *