தேர்தலில் ஐ.தே.கவே படுதோல்வியடையும்! – அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“ஊழல், மோசடியால் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவேமாட்டார்கள். எனவே, விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக் கட்சிதான் படுதோல்வியடையும். நாம் வென்றே தீருவோம்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தகுதியானவர்கள் எவருமே இல்லை. ஆனால், எமது அணிக்குள் பல பேர் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் எமது அணிக்குள் வேட்பாளர் தெரிவில் சர்ச்சை நீடிக்கின்றது என வெளியில் இருப்பவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் எமது அணி தனித்துப் போட்டியிடும் அல்லது கூட்டணியாகப் போட்டியிடும். இது தொடர்பில் எமது ஆதரவுக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனினும், தேர்தல்களில் நாம் பலம் பொருந்திய – வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர்களையே களமிறக்குவோம். ஊழல், மோசடியால் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவேமாட்டார்கள். எனவே, விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக் கட்சிதான் படுதோல்வியடையும். நாம் வென்றே தீருவோம். இது உறுதி.

நாம் ஆட்சிக்கு வந்ததும் அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம். தீவிரவாதத்தைக் கூண்டோடு இல்லாதொழிப்போம். பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஊழல், மோசடிக் குற்றவாளிகளைச் சிறைக்குள் தள்ளுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *