தமிழரசின் தலைவர், செயலராக மீண்டும் மாவை, துரையே தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடும், வாலிப முன்னணி மாநாடும் இன்று மாலை யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுத் தெரிவும் இடம்பெற்றது.

அதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராஜா ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதேவேளை, பொதுச் செயலாளராக மீண்டும் கி.துரைராஜசிங்கம் தெரிவுசெய்யப்பட்டார்.

துணைத் தலைவர்களாக பொன். செல்வராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இணைப் பொருளாளர்களாக பெ.கனகசபாபதி, வ.கனகேஸ்வரன் ஆகியோரும், உப தலைவர்களாக க.துரைரெட்ணசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.குருகுலராஜா, சி.சிவமோகன், அ.பரஞ்சோதி மற்றும் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

துணைச் செயலாளர்களாக எஸ்.எக்ஸ்.குலநாயகம், ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், சி.தண்டாயுதபாணி, சாந்தி சிறீஸ்கந்தராஜா, கே.வி.தவராசா மற்றும் த.கலையரசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

கூட்டத்தின் நிறைவில் கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்து தற்போது பொதுக்குழு கூட்டம் இடம்பெற்று புதிய தேர்வுகளும் இடம்பெற்றுள்ள நிலையில், நாளை பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் அதாவது எமது மக்களின் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயம், வேலைவாய்ப்பு என்பவற்றுடன் மிக முக்கியமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு நிர்வாக அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும்” – என்று தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் பிரதிநிதிகளோடு கொழும்பு மாவட்டப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு, நாளை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *