கணினி யுகத்துக்குள் அரசு! உயர்தர மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘டெப்!!’ – பிரதமர் ரணில் உறுதி

“எமது அரசு கணினி யுகத்துக்குள் நகர்ந்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினிகள் வழங்கப்படும். இந்தப் பாரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை ஆகும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கல்வியை நாம் நவீனமயப்படுத்த வேண்டும். இந்தக் கல்வியை நாம் கணினி மட்டத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தை புதிய யுகத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே நாம் பாடுபடுகின்றோம்.

நாம் நவீனமயமாகாவிட்டால் அது நாட்டுக்குச் செய்கின்ற அநியாயமாகும். ஒரு காலத்தில் சுவடிகளை நாம் படித்தோம். பின்னர் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் படித்தோம். அதேபோல் கரும்பலகையில் எழுதினோம். பின்னர் வெள்ளைப்பலகையில் எழுதினோம். இப்போது ஒட்டுமொத்தமாகக் கணினி யுகத்துக்குள் வந்துள்ளோம்.

அடுத்த பாடசாலை தவணையிலிருந்து உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினிகள் வழங்கப்படும். இதனை ஆசிரியர்களுக்கும் வழங்குவோம். இந்தப் பாரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை ஆகும்.

எமது அரசு கணினி யுகத்துக்குள் நகர்ந்துள்ளது. இதனூடாக தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய அனைத்து மொழிகளையும் அனைவரும் கற்கலாம். இதனூடாக அடுத்த தலைமுறைக்கு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வழங்குவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *