கைதான நபர்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கவில்லை ரிஷாத்! – தெரிவுக்குழு முன் இராணுவத் தளபதி சாட்சியம்

“உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரையும் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனோ அல்லது வேறு எவருமோ எனக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.”

– இவ்வாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

“கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷாம் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிர​தசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், ரிஷாத் பதியுதீன் தொலைபேசி ஊடாக மூன்று தடவைகள் என்னைத் தொடர்புகொண்டு இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரா என்று மாத்திரமே என்னிடம் வினவினார்” எனவும் இராணுவத் தளபதி கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அரசியல்வாதி அல்லது தனிநபர் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனரா என்று தெரிவுக்குழு குழு இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியது. அப்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட இராணுவத் தளபதி, மேலும் கூறியதாவது:-

“இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஏப்ரல் 21ஆம் திகதி, நான் இராணுவத்தைப் பாதுகாப்பில் ஈடுபட வைத்தேன். நான் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டு இராணுவம் சோதனைகள், தேடல்கள் மற்றும் கைதுகளை மேற்கொண்டது.

ஏப்ரல் 26ஆம் திகதி, தெஹிவளையில் இஷாம் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுத்தார். எனக்கு அமைச்சரைத் தெரியும்.

இந்த நாடாளுமன்றத்தில் பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை இராணுவத் தளபதி என்ற ரீதியில் நான் அறிவேன். அது நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே, அவர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் பேச தொலைபேசியில் அழைப்பு எடுப்பார்கள். நிகழ்வுகளைப் பற்றியும் அவர்கள் என்னிடம் பேசுவார்கள்.

அன்று ரிஷாத் பதியுதீன் என்னை அழைத்து இஷாம் அஹமட் என்ற பெயருள்ள நபர் கைதுசெய்யப்பட்டாரா என்று கேட்டார். அந்த நேரத்தில் நான் தெரியவில்லை என்றும், பின்னர் பார்த்து தகவல் தருகின்றேன் என்றும் குறிப்பிட்டேன்.

இரண்டாவது முறையாக அவர் அழைத்தபோது நான் இன்னும் தேடுகிறேன் என்று சொன்னேன். அந்த நேரத்தில் என்னால் பதிலளிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் கொழும்பில் விசேட அதிரடிப்படை செயற்பட்டு வந்தது. இந்தப் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டாரா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அதனை ஆம் என்று உறுதி செய்தனர்.

அன்று மாலையில் மீண்டும் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியூடாக என்னுடன் பேசியபோது, ​​”ஆம், அப்படி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இனிமேல் இதுதொடர்பில் என்னுடன் பேச வேண்டுமெனில் ஒன்றரை வருடங்கள் கழித்து எனக்கு அழைப்பு எடுங்கள்” என்று சொன்னேன்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட எந்தவொரு நபரையும் 24 மணி நேரத்துக்குள் ரி.ஐ.டியிடம் ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாத விசாரணைக்குள் குறித்த நபரை ஒன்றரை ஆண்டுகள் வரை தடுத்துவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் ரிஷாத்திடம் அப்படிச் சொன்னேன். ஆனால், ரிஷாத் குறித்த நபரை விடுவிக்குமாறு எனக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை” – என்றார்.

“வேறு யாராவது உங்களுக்கு அழுத்தங்களை வழங்கினார்களா?” என்று தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குத் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

இராணுவத் தளபதியிடமிருந்து சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கிய சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, தெரிவுக்குழு உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு கேள்வியை எழுப்பினார்.

“ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சுறுத்தலை எதிர்கொள்ள உளவுத்துறை மறுசீரமைப்புக்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று இராணுவத் தளபதியிடம் பீல்ட் மார்ஷல் கேட்டார்.

“பீல்ட் மார்ஷல் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளார். எனவே, ஊடகங்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்” தெரிவுக்குழுவின் மற்றொரு உறுப்பினரான அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் “ஊடகவியலாளர்களே தயவுசெய்து இதற்கு இடம் விடுங்கள். இது ஒரு முக்கியமான பிரச்சினை என்று நாங்கள் நினைக்கின்றோம். எனவே, இங்கிருந்து வெளியேறுங்கள்” என்று கூறினார்கள்.

பாதுகாப்பு விடயங்கள் வெளிப்பட்டதால் அந்தச் சாட்சியம் முடியும்வரை ஊடகவியலாளர்கள் வெளியில் நின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *