விடுதலையை வென்றெடுக்க கட்சிகள் ஒன்றுபட வேண்டும்! – செல்வம் எம்.பி. வலியுறுத்து

“சகல கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.”

– இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“எமக்குள் ஒற்றுமை இல்லையெனில், சிங்கள பெரும்பான்மை கட்சிகள் எமது பகுதியில் வலுவாக கால் ஊன்றுவதற்கான செயற்பாட்டை நாங்கள் செய்திருக்கின்றோம் என்றே எண்ண வேண்டும். தற்போது இருக்கின்ற நிலையில் தமிழ்த் தரப்புக்கள் ஒற்றுமையாகச் செயற்பாடாதுவிடின் வடக்கு, கிழக்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகளிடம் கைமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘ஏப்ரல் 21’ தீவிரவாதத் தாக்குதல் மற்றும் புத்த பிக்குகளின் செயற்பாட்டால் எங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன.

மக்களுக்காகச் செயற்படுகின்றோம் என்று கூறுகின்ற அத்தனை கட்சிகளும் ஒற்றுமை என்ற விடயத்தை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமை ஏற்படாத நிலையில் எங்களுடைய தேசிய பிரச்சினை, எங்களுடைய இனப் பரம்பல், எங்களுடைய வரலாறு எல்லாம் அழிகின்ற ஒரு அபாயத்தை நோக்கிச் செல்லும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கட்சியில் இருந்துதான் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீன் பிரிந்து சென்றார். இரு கட்சிகளாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். தற்போது ஒற்றுமையாக மாறியிருக்கின்றார்கள். இது முஸ்லிம் சமூகம் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

எமது தமிழ்ச் சமூகமும் ஒற்றுமைப் பட வேண்டும். இப்போதும் மாறி மாறி சேறுகளைப் பூசுகின்ற, எங்களுக்குள் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது. சரி, பிழை என்பது வேறு. எல்லாக் கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக ஒன்றுபட வேண்டும்.

ஒற்றுமைப்படுகின்ற காலகட்டம் தற்போது இருக்கின்றது. ஆகவே, ஒற்றுமைப்பட வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில், நாம் மக்களின் குரல்களாக இருக்கின்றோம் என்று கூறிக் கொண்டு ஏமாற்றுகின்றோம் என்பதுதான் உண்மை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *