கல்முனை வடக்கில் போராட்டம் தீவிரம்! – அரசின் உறுதிமொழியுடன் சென்ற குழு மீது கொதிப்பு; காலம் கடத்த முயலாது தீர்வு வழங்க வலியுறுத்து

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைப்பது தொடர்பாக அரசு முன்வைத்துள்ள தீர்வைக் கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் ஏற்க மறுத்துள்ளனர். அந்தத் தீர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக இன்று அங்கு சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவினருக்குப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அதையடுத்து அந்தக் குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் அகற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தப்பட்டு வருகின்றது. இன்று இந்தப் போராட்டம் 5ஆவது நாளாகத் தொடர்ந்தது.

இந்து, கிறிஸ்தவ, பௌத்த மதத் தலைவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் எனப் பலர் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே முக்கிய சந்திப்பு நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றிருந்தது. உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் இதில் கலந்துகொண்டார்.

அந்தச் சந்திப்பின் பின்னர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தைப் போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் தெரிவியுங்கள் என்று பிரதமர் எம்மிடம் தெரிவித்திருந்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சோ.சேனாதிராஜா நேற்று தெரிவித்திருந்தார்.

நேரில் சென்றது குழு

இந்தப் பிரச்சினை தொடர்பில் எட்டப்பட்ட தீர்வை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அறிவிப்பதற்காக இன்று அமைச்சர்களான தயா கமகே, மனோ கணேசன் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கல்முனைக்குச் சென்றிருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைச் சென்று சந்தித்துள்ளனர்.

அங்கு மக்கள் முன்னிலையில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார். அதன்பின்னர் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் அறிவித்தார்.

பிரதேச செயலகம் ஏற்கனவே தரமுயர்த்தப்பட்டுள்ளது என்றும், அதற்குக் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், பிரதேச செயலகத்துக்கான முழுமையான அதிகாரத்தை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்ததுடன், அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் அவை தாமதமடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

மக்கள் கொதிப்பு

இந்தநிலையில் அங்கிருந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 3 மாத கால அவகாசம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதுடன் அது உக்கிரமடைந்தது.

“இந்தத் தீர்வில் எந்த விடயமும் இல்லை. இது எம்மை ஏமாற்றிக் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடு. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அங்கிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் சூழ்ந்து கொண்டதுடன் ஆவேசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். அதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரை பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நின்றவர்களில் சிலர் கையில் கிடைத்தவற்றை எடுத்து எறிந்து தாக்க முயன்றனர் என்று கூறப்படுகின்றது. எனினும், பாதுகாப்புப் பிரிவினர் பலத்த சிரமத்தின் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினரை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அமைச்சர் தயா கமகே அங்கிருந்தவர்களை அமைதிப்படுத்த முயன்றபோதும் அது கைகூடவில்லை. அமைச்சர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

தீர்வு வழங்கப்படும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்தச் சம்பவங்களால் கல்முனைப் பிரதேசம் இன்று பதற்றமாகக் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *