மலிங்கவின் மிரட்டலில் தோற்றது இங்கிலாந்து! – இலங்கை த்ரில் வெற்றி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தைச் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 1 ஓட்டத்திலும், குசல் பெரேரா 2 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்துக் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ சற்றும் மனம் தளாராமல் ஆடிய ஆட்டமும், அவருடன் சேர்ந்த குசல் மெண்டிஸ் ஆடிய மிகப் பொறுமையான ஆட்டமும் இரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்தது. ஆனால், இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அவ்வப்போது சில பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய அவிஷ்கா பெர்னாண்டோ 49 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதன் பின் மெத்யூஸ், குசல் மெண்டிஸுடன் கைகோர்க்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.

நிதான ஆட்டத்தின் மூலம் ஓரளவு ஓட்டங்களைச் சேர்த்த குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களில் வெளியேற, அடுத்த பந்திலேயே ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் மெத்யூஸ் சேர்ந்து அணியின் ஓட்ட எணிக்கையைச் சற்று உயர்த்தினர். தனஞ்ஜெயா டி சில்வா 29 ஓட்டங்களிலும், திசரா பெரேரா 2 ஓட்டங்களிலும், இசுரு உதனா 6 ஓட்டங்களிலும், மலிங்கா ஒரு ஆட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை எடுத்தது.

தனது அரைச்சதத்தைப் பதிவு செய்து கடைசி வரை போராடிய மெத்யூஸ் 85 ஓட்டங்களுடனும், நுவான் பிரதீப் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியில், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்கவுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், அடில் ரஷித் 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஜோரூட் மற்றும் மோர்கன் ஓரளவு அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இதில் சிறிது ஓட்டங்கள் சேர்த்த மோர்கன் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ், ஜோரூட் உடன் கைக்கோர்க்க அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று உயர்ந்தது.

இதில் தனது அரைச்சதத்தைப் பதிவு செய்த ஜோரூட் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களுடனும், மொயீன் அலி 16 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 2 ஓட்டங்களுடனும், அடில் ரஷித் ஒரு ஓட்டத்துடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஓட்டங்களுடனும் என அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து போராடி தனது அரைச்சதத்தைப் பதிவு செய்த பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணியில் லசித் மலிங்க 4 விக்கெட்டுக்களும், தனஞ்ஜெயா டி சில்வா 3 விக்கெட்டுகளும், இசுரு உதனா 2 விக்கெட்டுக்களும், நுவான் பிரதீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக லசித் மலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *