புதுடில்லி செல்ல முன் தீர்வு தாமதமாவது குறித்து நாடாளுமன்றில் விவாதம்! – கூட்டமைப்பு அதிரடி முடிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்துவதற்காகப் புதுடில்லி செல்வதற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது.

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இன்று அல்லது நாளை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இரண்டு நாட்கள் விசேட விவாதத்துக்கான கோரிக்கையைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்து, அதற்கான திகதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு இணக்கமான சுமுகத் தீர்வு எட்டுவதற்கு விடுதலைப்புலிகளே முட்டுக்கட்டை என்று தென்னிலங்கையால் முன்னர் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்தது.

இராணுவ ரீதியில் விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இன்னமும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வு காணாப்படவே இல்லை. காணப்படும் என்ற நம்பிக்கையும் அருகி வருகின்றது. தீர்வுக்கான இணக்கமும், வாய்ப்பும் இந்த நாடாளுமன்றத்திலேயே உருவான பின்னரும், அது நடைமுறைக்கு வராமல் போனமைக்குக் காரணம் யாது? – என்ற கேள்வியின் அடிப்படையில் இத்தகைய விசேட விவாதம் ஒன்றுக்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் நேற்றுக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முதலில் நாடாளுமன்றத்தில் இது குறித்த விசேட விவாதத்தில் தமிழர் தரப்பின் ஆதங்கங்கள், நீதியான எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பகிரங்கப்படுத்துவது என்றும், பின்னர் அடுத்த கட்டமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை நேரில் , தமிழருக்கு நீதியான தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கின்றமை குறித்து தெளிவுபடுத்தி சர்வதேசத்தின் கவனத்தை ஆழமாகத் திருப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், க.கோடீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *