முன்பள்ளி ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கு சிறந்த பணிகளை மேற்கொள்ளும் நைற்றா!

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றி வருகின்றனர். மிகவும் குறைந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு பல்வேறு இடர்களுக்கு மத்தியில் பன்னெடுங்காலமாக இவர்கள் ஆற்றிவரும் பணிகள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவை.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஸீர் அஹமட் பொறுப்பேற்ற காலத் தில் இவர்களது கொடுப்பனவு குறித்து முக்கிய கவனம் செலுத்தினார். எனினும், மாகாண சபைகளுக்குள்ள நிதி ஒதுக்கீட்டு வரைமுறைகளில் இவர்களது சம்பள விடயங்கள் தொடர்பில் நிதி ஒதுக்கக்கூடிய நிலைமை இல்லாதிருந்தபோதும் முதலமைச்சராகவும் அதேநேரம் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காரணத்தால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களது சம்பள விடயம் தொடர்பில் அவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பணவாக வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயற்பணிகளை ஆரம்பித்தார். இதன் முதல் நகர்வாக மாதாந்தம் மூவாயிரம் ரூபா இவர்களுக்கு சம்பளமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அவரது பதவிக்காலத்தில் இவை செவ்வனவே கிடைக்கப்பெற்றன.

இவர்களது சம்பள உயர்வுக்கான இலக்கை நோக்கிய அடுத்தகட்ட நகர்வை மேற்கொண்டிருந்த நிலையில் மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைந்தது.

இதனால் இவர்களது கொடுப்பனவு குறித்த விடயம் யாரும் கவனம் செலுத்தாத நிலையில் தேக்கநிலை அடைந்தது.

இதன்பின்னரான காலப்பகுதியில் புதிய ஆளுநராக ஹிஸ்புல்லாஹ பதவி வகித்த காலத்தில் இவர்களது சம்பளம் ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு நாலாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், கொடுப்பனவு குறித்த உரிய இலக்கை நோக்கிய இவர்களது நிலைமை நிவர்த்தி செய்யப்படவில்லை.

இந்தநிலையில், இவ்வருடம் பெப்பரவரி மாதம் 20ஆம் திகதி, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவராக நஸீர் அஹமட் பதவியேற்றதும் இவர்களது விடயங்களில் துரித கவனம் செலுத்தினார்.

இவர்களில் பலரின் கல்வித்தகமைகள் குறைந்த நிலையில் இருந்த போதும் சமூகநல மேம்பாட்டு உணர்வுடன் இவர்கள் மேற்கொண்ட பணிகள் பாராட்டப்படவேண்டியவை என்பதையும், போர்க்காலத்தில் இவர்கள் தமது கல்வித் தகமைகளை மேம்படுத்த முடியாத நிலையில் முடக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் நைற்றா நிறுவன உயர் அதிகாரி களுக்கு எடுத்துக்காட்டி – இத்தகைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரச அங்கீகாரமுள்ள சான்றிதழ்களை வழங்க நைற்றா நிறுவனம் மேலதிக பயிற்சிகளை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விபரித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை அடங்கலாக சகல மாவட்டங்களிலுமுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு NVQ – 4 எனப்படும் அரச அங்கீகாரம் கொண்டு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகத் இவர்கள் தத்தமது கல்வித் தகமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அந்தந்தத் தொழில்துறையில் நிரந்தர ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது ஜி.சீ.ஈ. சாதாரணதரம் மற்றும் உயர்தர சான்றிதழ்களுக்கு நிகராக இந்தச் சான்றிதழைப் பயன்படுத்திக் கொள்ளும் வரப்பிரசாதமாக இது அமைந்துள்ளது.

இதற்காக நைற்றா நிறுவனம் ரூபா 7 கோடி 80 இலட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடுகளைச் செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தப் பணிகள் முதற்கட்டமாக NVQ – 4 சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான முன்மாதிரி செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் ஆரம்பம் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மஞ்சம் தொடுவ தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் மட்டக்கனப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாம் கட்டமாக கடந்த எப்பிரல் 8, 9ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1200 இற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு சம்மாந்துறை மஜித் மண்டபத்திலும் அம்பாறை மாநகர சபை மண்டபத்திலும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நைற்றா நிறுவனத் தலைவருமான நஸீர் அஹமட் பிரதம அதியாகக் கலந்துகொண்டார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மன்சூர், கலாநிதி இஸ்மாயில் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜாசிங்கம், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரிய பணியகத்தின் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் நைற்றா நிறுவன உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் தற்போது அவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக (11.12.13.14ஆம் திகதிகளில்) நடைபெற்றன.

கடந்த 11ஆம் திகதி ஏறாவூர் நைற்றா பயிற்சி நிலையத்தில் ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், 12ஆம் திகதி மஞ்சஞ்தொடுவா தொழில்நுட்பக் கல்லூரியில் மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனைப்பற்று மேற்கு, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட றேஜி மண்டபத்தில் கோராளைப்பற்று தெற்கு, கோராளைப்பற்று மத்தி, கோராளைப்பற்று, கோராளைப்பற்று வடக்கு, கோராளைப்பற்று மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்றும் 14ஆம் திகதி களுவாஞ்சிக்குடி இராஜமாணிக்கம் மண்டபத்தில் மண்முனைப்பற்று வடக்கு, எருவில்பற்று, போரதீவுபற்று பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் நடைபெற்றன.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கூடிய விரைவில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

நைற்றா நிறுவனத்தின் தலைவராக நஸீர் அஹமட் பதவி ஏற்றமையைத் தொடர்ந்து வரலாற்றில் முதன் முதலாக இத்தகைய பணிகள் நைற்றா நிறவனத்தால் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதுவரையான காலப்பகுதிகளில் நைற்றா நிறுவனம் இவ்வாறு பிரதேசங்களுக்குச் சென்று பயிற்சிப் பட்டறைகளை நடத்தி பரீட்சைகளை நடத்தவில்லை. முதன்முறையாக இவ்வாண்டு இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையும், முதல் தடவையாகக் கிழக்கில் இதற்கான பரீட்சைகள் நடத்தப்படுகின்றமையும் விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *