7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபாரமாக வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

இதில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஓட்டம் எதுவுமின்றி உடனே ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் இவின் லீவிஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

இந்த ஜோடியில், ஆரம்ப வீரராகக் களமிறங்கி பொறுப்புடன் ஆடி தனது அரைச்சதத்தைப் பதிவு செய்த இவின் லீவிஸ் 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி சிறிது ஓட்டங்கள் சேர்த்த நிகோலஸ் பூரன் 25 ஓட்டங்களும், அதிரடியாக ஆடி அரைச்சதத்தைப் பதிவு செய்த ஹெட்மயர் 50 ஓட்டங்களும், ஆந்த்ரே ரஸ்செல் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், அதிரடி காட்டி ஓரளவு ஓட்டங்கள் சேர்த்த ஜாசன் ஹோல்டர் 33 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதத்தைப் பதிவு செய்த ஷாய் ஹோப் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேரன் பிராவோ ஆட்டத்தின் கடைசிப் பந்தில் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை எடுத்தது.

பங்களாதேஷ் அணியின் சார்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் மற்றும் முகமது சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களும், ஷகிப்-அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணியின் சார்பில் தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய சவுமியா சர்கார் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தமிம் இக்பாலுடன் ஷகிப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்டங்கள் மெதுவாக உயர்ந்தது. அதில் அரைச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முஷிபூர் ரகுமான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஷகிப்-அல்-ஹசனுடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய இந்த ஜோடியில், ஷகிப்-அல்-ஹசன் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடியில் லிட்டன் தாஸ் தனது அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி, மேற்கிந்தியத் தீவுகள் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

இறுதியில் ஷகிப்-அல்-ஹசன் 124 ஓட்டங்களும், லிட்டன் தாஸ் 94 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பங்களாதேஷ் அணி 41.3 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல், தாமஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *