நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலை! – அரசு கவிழ்ந்து விடுமா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது என்கிறார் சுமந்திரன் எம்.பி.

“நாட்டின் அரசியல் சூழ்நிலை ஒரு ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றது. எப்போது என்ன நடக்கும்? என்ன தேர்தல் வரும்? அரசு சிக்குமா அல்லது கவிழ்ந்து விடுமா? என்றெல்லாம் பல கேள்விகள் நாளாந்தம் எழுந்துகொண்டிருக்கின்றன.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து இலட்சம் ரூபா நிதியில் கரவெட்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வழிபாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையமும் மறைபோதனைக்கூடமும் கொண்ட கட்டடம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் தேவைகளை நிறைவேற்ற எம்மால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நாம் செய்வோம். குறுகிய காலத்துக்குள் – இந்த வருட இறுதிக்குள் பல நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

நாட்டின் அரசியல் சூழ்நிலை ஒரு ஸ்திரமற்ற நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். எப்போது என்ன நடக்கும்? என்ன தேர்தல் வரும்? அரசு சிக்குமா அல்லது கவிழ்ந்து விடுமா? என்றெல்லாம் பல கேள்விகள் நாளாந்தம் எழுந்துகொண்டிருக்கின்றன. எனினும், அவை ஒரு பக்கம் இருக்க, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்கின்ற நிகழ்ச்சித் திட்டங்களிலேயே நாங்கள் எங்களுடைய கவனத்தைத் செலுத்தி அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *