ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவா? இன்னமும் தீர்மானிக்கவே இல்லை! – மஹிந்த தெரிவிப்பு

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்குவதா என்றுகூட இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதுக்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்று எப்படிக் கூற முடியும்?”

– இப்படிக் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

“ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தக் கட்சியும் இன்னமும் தீர்மானிக்கவே இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி கூட இறுதி முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலையே பலர் விரும்புகின்றார்கள்” எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்பது உறுதியான விடயம் எனப் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அதேவேளை, “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச கூறியிருந்தார்.

இவ்விருவரினதும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *