2015 தேர்தலின்போது சஹ்ரானை நான் நேரில் சந்தித்தது உண்மை! – ஆனால் அவர் என்னைத் தோற்கடித்தார் என ஹிஸ்புல்லா பரபரப்பு சாட்சியம்

“2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஹ்ரான் ஹாசீமை காத்தான்குடியில் நான் நேரில் சந்தித்தேன். எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நானும் அவரைச் சந்தித்தேன். ஆனால், அந்தத் தேர்தலில் சஹ்ரான் என்னைத் தோற்கடித்தார்.”

– இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்ற கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தேன்.

நான் சஹ்ரானை அன்று சந்தித்தபோது, அவர் மத போதனைகளில் ஈடுபட்டு, பல இளைஞர்களை ஈர்த்திருந்தார். அப்போது அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

பின்னர் அவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

2017ஆம் ஆண்டு வரை அவர் ஒரு மதத் தலைவராகவே கருதப்பட்டார். அதன் பின்னரே அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வந்திருக்கலாம்.

சஹ்ரான் இஸ்லாம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு சர்சைக்குரியவராக இருந்த வேளையில்கூட அவரின் கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி அனுமதியைப் பொலிஸார் வழங்கியிருந்தனர்.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் சஹ்ரானோ, அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை.

சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அடுத்த தேர்தல் காலங்களில் எனக்குத் தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.

காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தனர்.

நான் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டபோது சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னைத் தோற்கடித்தனர்.

அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரவே காத்தான்குடியில் அரபு மொழியில் பெயர்ப்பலகைகள் இருக்கின்றன. அரபு மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படக்கூடாது என்று இங்கு சட்டம் இல்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *