தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அபிவிருத்தியை முடக்க இடமளிக்கவே முடியாது! – மைத்திரி திட்டவட்டம்

 

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைகளையும் முடக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கவே முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘வளமான தேசத்தின் வாவி புரட்சி’ எல்லங்கா குளக்கட்டமைப்பின் புனர்நிர்மாண செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (12) பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

3000 ஏக்கர் வயல் காணிகளில் அறுவடையை மேற்கொள்வதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் இணைந்ததாக 21 வாவிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் குருணாகல் மேற்கு பண்டுவஸ்நுவர கொட்ட கிம்புலாகட அணைக்கட்டுக்கு அருகில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரித் பாராயணத்துக்கு மத்தியில் ஜனாதிபதியால் வாவி புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சுற்றாடலையும் வன வளத்தையும் பாதுகாப்பதற்குத் தான் பல தீர்மானங்களை மேற்கொண்டது நாட்டு மக்களின் சுவாசிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் எனக் குறிப்பிட்டார்.

அந்தத் தீர்மானங்கள் குறித்து தன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், வன வளத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எவரும் தட்டிக்கழிக்க முடியாத ஒரு பொறுப்பாக இன்று மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்பி விவசாயிகளை வலுவூட்ட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வாவிகள் மற்றும் விவசாயத்துறைக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றி கடந்தகால கீர்த்தியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணக்கடன் பெற்றுக்கொடுத்தல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குளப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 200 கருங்காலி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்குதல், உணவுற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சில நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆர்.டி.ஜனித் மதுசங்க என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, சாந்த பண்டார, தர்மசிறி தஸநாயக்க, அத்துல விஜேசிங்க, எஸ்பி.நாவின்ன உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *