முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை நேரில் பார்வையிட்ட மனோ! – நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு பிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதிமன்றத் தீர்ப்பை பௌத்த பிக்கு, பொலிஸார் உள்ளிட்ட அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்று அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய ஆலயத்துக்குச் சென்றனர்.

இன்று கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக திருகோணமலை சென்றிருந்த அமைச்சர் மனோ கணேசன் தலைமையியலான குழுவினர், அவ்வீதி வழியாக முல்லைத்தீவுக்குப் பயணித்து பழைய செம்மலைப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்றனர்.

குறித்த ஆலயத்தில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

“அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்ற நிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளூராட்சி திணைக்களங்களின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதியளிக்கின்றது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மக்களுக்கு பிக்குவினாலும், பொலிஸாரினாலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் மற்றும் யாழ்.மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உள்ளிட்டோர் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து ஆலயத்தை இன்று பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் குருகந்த ரஜமஹா விகாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பிக்குவுடன் பேச்சு நடத்தினர்.

பின்னர் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், சி.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், குருகந்த ரஜமஹா விகாரை ஆலயப் பிக்கு, விகாரை சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணி, பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தொன்மை பற்றி விளக்கமளித்த பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், ஆலயம் தமக்கே உரியது என ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அத்துடன், பௌத்த பிக்குகளின் அடாத்தான நடவடிக்கைகள், பிக்குகளுக்குச் சார்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் புட்டுபுட்டு வைத்தனர். தமது முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாததையெல்லாம் அவர்கள் விலாவாரியாக எடுத்துரைத்தனர்.

புத்தசாசன அமைச்சால் ஆலயத்தின் இடம் குறித்து விளக்கம் கோரப்பட்டதையும், பிரதேச சபை அங்கு விகாரை இருக்கவில்லை என்று குறிப்பிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், பிக்குகள் சார்பு சட்டத்தரணி இதைக் கடுமையாக மறுத்தார். 2013ஆம் ஆண்டு, 80 -166 இலக்க வர்த்தமானியின் மூலம், அந்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் பொறுப்பேற்றது எனவும், அது தொல்பொருள் திணைக்களத்துக்குரிய நிலம் எனவும் அவர் தெரிவித்தார்.

விகாரை சார்பில் வந்த பௌத்த பிக்கு, ஆக்ரோசமாகவும், விடாப்பிடியாகவும் அது தமது பூர்வீக நிலம் என வாதிட்டார்.

அங்கு பிள்ளையார் ஆலயக் கட்டுமானத்துக்குப் பொலிஸார் தடை விதிப்பதை ஆலய நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், நீதிமன்றத் தடை இருக்கும்போதே விகாரை கட்டுமானம் நடந்ததையும் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஆலய நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய திணைக்கள அனுமதிகளைப் பெற்று வந்தால் குறித்த இடத்தை அனுமதியளிக்கத் தயாராக உள்ளதாகப் பொலிஸார் கூறினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி., “வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றோம். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. காலம்தான் வீணாகிக் கொண்டிருக்கின்றது. மனோ கணேசனால்கூட அதைச் செய்ய முடியவில்லை. இலங்கை அரசு இதைத் திட்டமிட்டு செய்கின்றது” என்றார்.

சி.சிறிதரன் எம்.பி. கருத்துத் தெரிவித்தபோது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அமைச்சுப் பதவியை ஏற்கும்படி வலியுறுத்துகின்றார்கள். ஆனால், நாளைக்கே, தமிழ் அமைச்சர்கள் பதவி விலகும்படி பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருந்தால் என்ன செய்வது? இங்கு தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் பிக்குகள் கோயில் அமைக்க விடுகின்றார்கள் இல்லை. அமைச்சர் மனோ கணேசனாலும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. உங்கள் கதையைப் பொலிஸாரே கேட்கின்றார்கள் இல்லை” என்று குறிப்பிட்டார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “முல்லைத்தீவு மாவட்ட மக்கள் போரால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்த மக்கள். இந்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம்” என்று பிக்கு மற்றும் பொலிஸார் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பௌத்தம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் பௌத்தம், சிங்கள பௌத்தம், ஜப்பான் பௌத்தம் என அதிலுள்ள பிரிவுகளைக் குறிப்பிட்டு, அனைத்துமே சிங்கள பௌத்தம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.

“நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பை இரண்டு தரப்பும் மதித்துச் செயற்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக வேலை செய்பவர்களைப் பொலிஸார் இடையூறு செய்யக்கூடாது. அதேபோன்று நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காது அனுமதிகள் எதுவும் பெற்றுக்கொள்ளாது அபிருத்தி வேலை செய்கின்ற பிக்கு தரப்பினரோ அல்லது பிள்ளையார் ஆலய தரப்பினரோ இருந்தால் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸார் பக்கச்சார்பாக இந்த விடயத்திலே செயற்படாது நீதியை நிலைநாட்ட வேண்டும்” எனவும் அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

“முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பொலிஸார், பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியன இணைந்து தற்போது வரை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடைபெற்று வருகின்ற வேலைகள் தொடர்பாகவும், தற்போது வரை எவ்வாறான கட்டடங்கள், எவ்வாறான நிர்மாணங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பவை தொடர்பாகவும் ஒரு காணொளிப் பதிவு ஒன்றைப் பதிந்து ஆவணமாக வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அறிக்கை ஒன்றையும் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் பணித்தார்.

தற்போது இந்த ஆலய விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டால், இந்தப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டு அதில் உள்ள உண்மை நிலைமைகளின்படி எமது அமைச்சு நீதிமன்றத்தில் தமது நியாயத்தைத் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிள்ளையார் ஆலயத் தரப்பினர் உரிய திணைக்களங்களின் அனுமதிகளோடு பிள்ளையார் ஆலயப் பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது எமது அமைச்சும் அதற்கான நிதி உதவிகளை வழங்கும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *