வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்! – கண்டும் காணாமல் சென்ற மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு சென்றபோது அங்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு நகருக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அங்கு 824 நாட்களாகத் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இந்த நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரான ஜனாதிபதி என்ன பதில் சொல்லப் போகின்றார்? இதுவரையில் பலமுறை ஜனாதிபதியின் கவனத்துக்கு எமது பிரச்சினையை நேரில் கூறியும்கூட இவர் எமக்கு இதுவரையில் நீதியைப் பெற்றுத்தரவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் குறித்து உரிய பதிலைத் தரவில்லை” என்று தெரிவித்து அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் அவர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே எனக் கேட்டுப் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மைத்திரி, குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற வீதியால் பார்த்துக்கொண்டு சென்றார். இவர்களின் போராட்டம் குறித்து அவர் செவிசாய்க்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *