சட்டவிரோத தொலைத்தொடர்பு சேவை நிலையம் நீர்கொழும்பில் முற்றுகை! 402 ஐபோன்கள் மீட்பு!! – 17,400 சிம் அட்டைகளும் சிக்கின; சீனப் பிரஜை உட்பட மூவர் கைது
சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவை நிலையத்தை நடத்தி வந்த சீனப் பிரஜை ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நீர்கொழும்பு சில்வெஷ்டர் பகுதியிலுள்ள வீடொன்றை இன்று (07) சோதனையிட்டபோது, தொடர்பாடல் கருவிகளுடன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த வீட்டிலிருந்து 402 ஐபோன்கள், 17,400 சிம் அட்டைகள், 60 ரௌட்டர்கள் மற்றும் 3 மடிக் கணினிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சீனப் பிரஜையுடன் நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சீனப் பிரஜை வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொலைத்தொடர்பு சாதனைங்களைப் பயன்படுத்தி சர்வதேச தொலைபேசி சேவைகளை வழங்கியதனூடாக சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தினர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.