பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் பங்கேற்ற வேண்டாம் என எனக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் ‘MY3’ – பூஜித பரபரப்பு சாட்சியம்

“தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் என்னைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்திருந்தார்” என கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று சாட்சியம் அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இறுதியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதியே கலந்துகொண்டேன். அதற்குப் பின்னர், எந்தப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனாதிபதி எனக்கு அறிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலர் ஊடாகவே அவர் இந்த தகவலை எனக்கு அறிவித்திருந்தார்.

ஏன் அவர் என்னை அழைக்கவில்லை என்று தெரியவில்லை. என் மீது அல்லது பொலிஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கக்கூடும்.

இதுபற்றி முன்னாள் பாதுகாப்பு பாதுகாப்புச் செயலர் கபிலவிடம் கேட்டபோது, “மன்னியுங்கள். இது ஜனாதிபதியின் உத்தரவு” என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கியபோது தேசிய புலனாய்வுத்துறை பாதுகாப்பு அமைச்சின் கீழ்தான் இயங்கியது.

தேசிய புலனாய்வுத்துறைப் பிரிவுகளுக்கு நான் செல்ல முற்பட்டபோது எனக்கு உரிய பிரதிபலிப்பு காட்டப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது.

சி.ஐ டி. முக்கிய விவகாரங்களை விசாரித்த இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யும்படி பல தடவைகள் அழுத்தங்கள் வழங்கப்பட்டன. அதனைச் செய்யுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரியிருந்தார். அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் அப்போது கோரியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புலனாய்வுத்துறை இணைப்புக்குழுக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி நான் கலந்துகொண்டிருந்தேன். தாக்குதல் சம்பந்தமான விடயங்கள் அங்கு கூட்டத்தின் ஓர் அங்கமாகவே பேசப்பட்டன. பின்னர் நான் அவை குறித்து உரிய பாதுகாப்புத் தரப்புக்களுக்கு அறிவித்தேன்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட விடயங்களை விசேட அதிரடிப் படை, குற்றத்தடுப்புப் பிரிவு, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, மேல்மாகாண பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்மாருக்கு அறிவித்தேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *