உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மைத்திரியைக் கடாசினார் பூஜித! – புலனாய்வுத்துறைப் பணிப்பாளரும் சிக்கினார்

“உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பதவியை இராஜிநாமா செய்தால் தூதுவர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொன்னார். அதேபோல விசாரணையில் க்ளியர் ஆகிப் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி சொன்னார். தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல் ஊடாக நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் முன்கூட்டியே தெரியாது. ஆனால், நான் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளேன்.”

– இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று சாட்சியம் அளித்தார் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

“பொலிஸ்மா அதிபர் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதியிடம் பரிமாறும் ஏற்பாடு இருக்கவில்லை. தேசிய புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் நேரடியாக அந்தத் தகவல்களை ஜனாதிபதியிடம் வழங்கி வந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் புலனாய்வுத் தகவல்கள் எதனையும் ஜனாதிபதியிடம் கூறினால் அதை புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் நிலந்த ஏற்கனவே தம்மிடம் கூறிவிட்டார் என ஜனாதிபதி சொல்லுவார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்.

சஹ்ரான் ஹாசீமின் சகாக்களால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காத்தான்குடி மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்புத் தொடர்பாக கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி எனக்குப் புலனாய்வுத்துறை கடிதம் மூலம் அறிவித்தது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து எனக்குக் குறிப்பாக எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. பொதுவான அச்சுறுத்தல் இருப்பதாகவே சொல்லப்பட்டது. உடனடித் தாக்குதல் குறித்து என்னிடம் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால, தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டேன் என நான் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளேன்.

2018ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர் சஹ்ரான் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 2018 ஜூனில் நீதிமன்ற பிடியாணை பெறப்பட்டது. இன்ரபோல் பொலிஸ் உதவி பெறப்பட்டது.

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6.30 – 8.00 மணிக்குள் எனக்குத் தேசிய புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் நிலந்தவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “நாளை மிகவும் ஆபத்தானது. எதுவும் நடக்கலாம்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதேபோல் ஏப்ரல் 21ஆம் திகதி காலை 6.45 – 7.15 மணிக்குள்ளும் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஆனால், இப்படியான தகவல்களை ஜனாதிபதிக்குச் சொல்லும் நடைமுறை இருக்காதபடியால் என்னால் அப்படிக் கூற முடியாமல் போனது. சனிக்கிழமை (ஏப்ரல் 20) இரவு எனக்குத் தகவல் கிடைத்த பின்னர் உடனடியாக எல்லா பிரதிப் பொலிஸ்மா அதிபர்மார்களுக்கும் அறிவித்தேன். அவசரகாலம் பிறப்பிக்கப்படவில்லை. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க எனக்குஅதிகாரமில்லை. அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க என்னால் முடியாது.

நான் பதவியை இராஜிநாமா செய்தால் எனக்குத் தூதுவர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதியால் கூறப்பட்டது. ஆனால், நான் அதனை ஏற்கவில்லை. இப்படியான உயர் பதவிகள் எனக்குத் தேவையில்லை. எனது சேவைக்காலத்தில் நான் ஒழுங்கீனங்கள் இன்றி சேவையாற்றியவன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *