ரணில், ருவான், பூஜித ஆகியோரை பாதுகாப்புச் சபைக்கு அழைக்காதீர்! – மைத்திரி பணித்திருந்தார் என ஹேமசிறி சாட்சியம்

ஜனாதிபதியின் திருவிளையாடல்களைத் தெரிவுக்குழு முன்

அவிழ்த்துவிட்டார் முன்னாள் பாதுகாப்புச் செயலர்

“பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருந்தார்.”

– இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் இன்று சாட்சியமளித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு 2018 நவம்பர் 13 ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். அன்று முதல் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிவரை தேசிய பாதுகாப்பு சபையின் நான்கு கூட்டங்கள் நடந்தன.

இரண்டு தடவைகள் நான் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக் கூற முயன்றேன். ஆனால், அரச புலனாய்வுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார்.

நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விபரிக்கும் நடைமுறை இருந்ததில்லை. அரச புலனாய்வுத்துறைப் பணிப்பாளருக்கும் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. நான்கு வருட காலம் ஜனாதிபதிக்குப் புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளரான நான் எனது அமைச்சரை சந்திக்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன். இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை கூடச் சந்திக்க கஷ்டமாக இருந்தது. அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. ஒரு கையொப்பம் பெறவே மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.

இவ்வருட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் மாக்கந்துர மதுஷ் பற்றித்தான் அதிக நேரம் பேசப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்தே தாக்குதல் அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்தத் தகவலையும் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்குக் கூறியிருக்கும் என நான் ஊகித்தேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் என்னைச் சந்திக்க அழைத்திருந்தார். அவரைச் சந்திக்கச் செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *