மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கண்டியில் காடையர்கள் தாக்குதல்! – சபையில் சீறிப் பாய்ந்தார் ரிஷாத்

“கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துத் துன்புறுத்தப்படுவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா?”

– இவ்வாறு கடும் சீற்றத்துடன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது நேற்று கண்டியில் ஒரு சாரார், வாருங்கள் இந்த நாட்டை அழிப்போம், கொல்லுவோம், பயங்காட்டுவோம், நாட்டின் நிம்மதியைத் தொலைப்போம், இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவோம், 1983 போல மீண்டும் ஓர் இனக்கலவரத்தைத் தூண்டி இந்த நாட்டை நாசமாக்குவோம் என அழைக்கின்றார்கள்.

இதை எல்லாம் இராணுவத்தினர், பொலிஸார், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறையினர் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமா என நான் கேட்கின்றேன். இதை ஏன் அனுமதிக்கின்றீர்கள் எனக் கேட்கின்றேன்.

கடந்த ஈஸ்டர் தின ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனையை வழங்குங்கள் அல்லது அதற்கும் மேல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், அப்பாவி முஸ்லிம்களைத் தண்டிக்காதீர்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களை மட்டும் சிறையில் அடையுங்கள்; அவர்களுக்குத் தண்டனை வழங்குங்கள்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று மூன்று முஸ்லிம் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்துத் துன்புறுத்தப்படுவதை நான் பார்த்தேன். இது எந்த மார்க்கத்தில் இருக்கின்றது. இது தர்மமா? நோன்பாளிகளை அவ்வாறு அடித்துத் துன்புறுத்துகின்றார்கள். அதற்குத் தண்டனையும் இல்லை; சட்டமும் இல்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *