இனவாதிகளின் கையில் நாடு; வேடிக்கை பார்க்கின்றது அரசு! – மிரட்டல்களுக்கு அடிபணியாது இனக் கலவரம் ஏற்படாது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தன் வலியுறுத்து

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாட்டைத் தமது கைகளுக்குள் இனவாதிகள் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆட்சியைப் பிடிக்க முயலும் ஒரு கும்பல்தான் இந்த இனவாதிகளைப் பின்புலத்தில் இருந்து இயக்குகின்றனர். நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் குறியாகவுள்ளனர் போல் தெரிகின்றது. எனவே, இதனை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் வேடிக்கை பார்க்காது – மிரட்டல்களுக்கு அடிபணியாது உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி அத்துரலிய ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில், தேரரை நேற்றுப் பகல் சந்தித்து உரையாடிய பொதுபலசேனாவின் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், மூவரையும் பதவி நீக்கம் செய்ய இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை அரசுக்குத் தாம் காலக்கெடு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது,

“ஜனாதிபதியாலும் பிரதமர் தலைமையிலான அரசாலும் நியமிக்கப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதியும், அரசும்தான் முடிவெடுக்க வேண்டும். எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. ஆனால், இனவாதிகள் இதற்கு எதிர்மாறாகச் செயற்பட்டு வருகின்றனர்.

இது நாட்டின் நன்மதிப்புக்கு நல்லதல்ல. இது தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *