வடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்!’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு

நகைச்சுவை நடிகர் வடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது என்று #Pray_for_Neasamani ஹேஷ்டேக்கை உருவாக்கிய விக்னேஷ் பிரபாகர் நெகிழ்ந்துள்ளார்.

https://puthusudar.lk/2019/05/30/who-is-this-nesamani/

டுபாயில் இருக்கும் விக்னேஷ் பிரபாகரின் பதிலால் மட்டுமே, இந்த ஹேஷ்டேக் உருவாகி ட்ரெண்டாகத் தொடங்கியது. தனது கருத்தால் உருவான இந்த ஹேஷ்டேக் இப்போது வைரலாகி வருவதால், அவரது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தொடரும் வாழ்த்தால் திக்குமுக்காடிப்போன விக்னேஷ் பிரபாகர், தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் விக்னேஷ் பிரபாகர்,

“அனைவருக்கும் வணக்கம். டுபாயிலிருந்து விக்னேஷ் பிரபாகர் பேசுறேன். ஒரே ஒரு கமென்ட்டால் இந்தியளவில் ட்ரெண்டான ‘நேசமணி’ விக்னேஷ் பிரபாகர். நான் என் கொமண்டால் இந்த மாதிரி எல்லாம் ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை.

விளையாட்டாகப் போட்ட கொமண்ட் அது. அதைப் போடும்போது 10, 15 பேர் லைக் பண்ணுவார்கள் என நினைத்தேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. இந்தக் கொமண்டை நண்பர்கள் குரூப்பில் ஷேர் செய்த தீபனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நேசமணி என்றால் யாரென்றே தெரியாது என்று கொமண்ட் செய்துள்ளவர் என் பள்ளி நண்பர்தான்.
அவனுக்கு, நேசமணி யார் என்று தெரியும். ஆனால், கொமண்ட்டில் தெரியாத மாதிரி கேட்டான். நானும் அவனுக்கு விளக்கமளித்தேன். மற்றபடி திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. ப்ளான் பண்ணியிருந்தால் இந்தளவுக்கு ட்ரெண்டாகியிருக்குமா என்று சொல்ல முடியாது. எதார்த்தமாகப் பண்ணியது இப்படி நடந்துவிட்டது. சத்தியமாக இந்த மாதிரியாகும் என நினைத்துப் பார்க்கவில்லை.

என் பேஸ்புக்கில், என்னை டேக் செய்து நிறைய போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மொபைலே ஹேங்காகிவிட்டது. ரொம்ப நன்றி. டிவியில் எல்லாம் செய்தியாகப் போட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இங்கு டிவி இல்லை. எனக்கு மொபைல், பேஸ்புக்தான் பொழுதுபோக்கு. ஊரிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினர்.

வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகிறேன். வடிவேலு சேருக்கு நன்றி. நம் வாழ்க்கையில் எந்தவொரு நிலைமைக்கும், வடிவேலு சேருடைய காட்சி ஒன்று இருக்கும். வெளிநாட்டு பேஸ்புக் பக்கம், அதில் நம் ஆட்கள் நிறையப் பேர் இருக்க மாட்டார்கள் என நினைத்தேன். அதில் பலரும் ‘டங் டங்’ என்ற சத்தம் கொண்ட கொமண்டைத்தான் விரும்புவார்கள் என நினைத்தேன். நேசமணியை நினைக்கவில்லை. வடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது.

எதற்கு இப்படியொரு ட்ரெண்டிங், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன என்று சொல்வார்கள். போராட வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு, இதுக்கு ஏன்? என்று சிலர் மனவருத்தப்படலாம். உங்களுக்காக மறுபடியும் சொல்றேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைக்கவில்லை. இணையத்தின் வலிமையை ஒருநாளில் தெரிந்துகொண்டேன். ஒரு கொமண்டால் இளைஞர்களின் வலிமையைக் காண்பித்துவிட்டீர்கள். நன்றி!” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் பிரபாகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *