மோடியின் புதிய அரசு இன்றிரவு பதவியேற்பு! – டில்லியில் பலத்த பாதுகாப்பு

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டில்லியில் பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களைக் கைப்பற்றியது. எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு தனித்து ஆட்சியைப் பிடித்தபோது கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதாக் கூட்டணி அரசு அமைக்கின்றது. நாடாளுமன்றப் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு, புதிய பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அதையேற்று மோடி இன்று வியாழக்கிழமை மீண்டும் பிரதமராகப் பதவியேற்க இருக்கின்றார். இதன்மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆகின்றார்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகின்றது. விழாவில் மோடிக்கு, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராகப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார். மோடியுடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள்.

மோடியின் அழைப்பையேற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளான பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியன்மார் ஜனாதிபதி யூ வின் மையின்ட், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றார்கள்.

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால், அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், இந்த முறை மோடி அரசு பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 8,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். இதனால் இடவசதியைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்திய வரலாற்றில் பிரதமர் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6ஆவது முறை ஆகும். பதவியேற்பு விழா ஒன்றரை மணி நேரம் நடைபெறும். விழா முடிந்ததும், அதில் கலந்துகொண்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி விருந்தளிக்கின்றார்.

பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லிப் பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினர் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோடி மற்றும் பிற தலைவர்கள் செல்லும் பாதைகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சுடுவதில் திறன் பெற்ற சினைப்பர்தாரிகளும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டில்லியில் உள்ள பல்வேறு முக்கிய வீதிகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த வீதிகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *