உலகக் கிண்ணத்தின் தூதுவராக மஹேல!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முன்னணி நட்சத்திர வீரர்களாக வலம் வந்த 12 முன்னாள் தலைவர்கள் மற்றும் வீரர்களை இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் சிறப்புத் தூதுவர்களாக நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன முதல் முறையாக உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள நிலையில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளமையால் அதற்காக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் புதிய அம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை ஐ.சி.சியும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் முன்னெடுத்து வருகின்றன.

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு, மகத்துவம், முன்னேற்றப் பாதை, அண்மைக்கால மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை முழு உலகுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் 12 முன்னாள் வீரர்களை உலகக் கிண்ணத் தூதுவர்களாக நியமிக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தக் குழுவில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய முன்னாள் அணித் தலைவர்களும், கடந்தகால உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த முன்னாள் வீரர்களும் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *