ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரக் ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 இற்கும் மேற்பட்டோரைப் படுகொலைச் செய்து, 500 இற்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக, இன்று (24) ஜும்மா தொழுகையின் பின்னர், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.

பெரியமுல்லையில் அமைந்துள்ள, பெரிய பள்ளிவாசலின் முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜும்மா மஸ்தித் வீதி வழியாக நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள யூஸுபியா பள்ளிவாசல் வரை பேரணியாக வந்து, பிரதான வீதியோரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவர்கள் பதாதைகளையும் , ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் வழிநடத்தலில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு எதிராகவும், குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட – மரணித்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினரால் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 110 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 200இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *