நாட்டுக்கு வைக்காதீர் தீ!

நாட்டில் பயங்கரவாத சேறு பூசப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் முழு வாழ்வுக்கும் மெய்ப் பூச்சில் இனவாதம் மெழுகப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பம் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரினதும் மனதிலும் அலையலையாய் உதிக்கும் ஏக்கத்தின் வைரஸாக வியாபித்துள்ளது.

கூலிப்படையாக மூளை கழுவப்பட்டு மார்க்கத்தைப் பூரணமாகக் கற்காது மௌலவி எனப் பெயர் தாங்கிய சில கூலிப்படையாளிகளின் வீரமற்ற கோரச் செயல் ஏப்ரல் 21 அன்று முழு இலங்கையையும் அழுகையில் ஆழ்த்தியது.

இதன் தொடரில் படையினரின் முழு மூச்சான தேடுதலால் தெரிவானதெல்லாம் முஸ்லிம் பெயர் பொறிக்கப்பட்ட மார்க்கம் அறியா, மனிதம் அற்ற படித்த மக்குகள். இச் செயலைக் கண்டித்து முழு நாடுமே ஆத்திரமடைந்தது.

குறிப்பாக அதிக ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், இப்படியான சூத்திரதாரிகளை அவர்களே காட்டியும் கொடுத்தனர். பிறந்த ஊரையும் பெயரளவில் நாசமாக்கிய விஷமிகள், பிற ஊர்களையும் வாடகைக்கு இருந்த போர்வையில் மானங் கப்பலேற்றி சுக்குநூறாக்கினர். இவர்கள் மனிதர்களா? பலனற்ற பயங்கரவாதத்துக்குப் பலிக்கேடாக சமூகத்தை அடகு வைத்து அவர்களும் மாய்ந்து விட்டனர்.

உண்மையில், இஸ்லாத்தை சரியாக புரிந்த எவரும் இப்படியான கீழ்த்தரமான உயிர்க்கொல்லி நாசகார வேலையை செய்திருக்க மாட்டார்கள். இது தளம்பும் குடமொன்றின் நிலையே! ‘குறை குடங்களே’ இவ்வாறான மூளைக்கும், முண்ணானுக்கும் சம்பந்தமற்ற விடயங்களைச் செய்துள்ளன.

ஆனால், இதன் பொறுப்புதாரர்கள் முழு முஸ்லிம்களும் அல்ல என்பதை அரசும், அமைச்சர்களும், மதத் தலைவர்களும் செக்கனுக்குச் செக்கன் வலுத்துக் கூறியபோதும் இனவாத வெறியாட்ட சில காடையர்கள் கண்ட இடமெல்லாம் தீப்பற்ற வைத்தனர்.

சமாதானத்தைக் கொழுத்தி துண்டாட எண்ணி, இன முறுகலை அகலமாக்கிப் படபடவென பொறியெழுப்பினர். அவ்வாறு அவர்களின் கீழ்த்தரமான விஷ வாயுக்கள் கக்கப்பட்டாலும் அவர்களின் ஆட்டத்தை செயலளவில் அடக்குமுறைக்குக் கொண்டுவந்த அரசுக்கு நன்றிகள்.

இவ்வளவு இடம்பெற்ற போதிலும் பலத்த தியாகங்களுக்கு மத்தியில் முப்படையினரின் முழு மூச்சான செயற்பாடுகளும் பாராட்டப்பட வேண்டியதாகும். அரசியல் கெடுபிடிகள், அழுத்தங்கள் கொடுத்த போதிலும் அசையாமல் நின்ற வேகம் முழு இலங்கையரையும் இன்று மிளிர வைக்கின்றது.

எவ்வளவுதான் இருந்தாலும், ஆரம்ப காலம் தொட்டு அந்திம காலம் கடந்து இன்று வரை எழில் நிறைந்த எமது நாட்டை மோப்பமிடும் வெளிநாடுகள் சில ஏப்பம் விடக் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதனடியில் விட்ட விஷ எச்சமாகவும் இக் காலப் பிரச்சினைகள் இருக்கலாம். போருக்குள் புகுந்த நாட்டை மீட்டு 10 வருடங்கள் நிம்மதியையும், சமத்துவத்தையும், சமாதானத்தையும் சுவைத்த ஒவ்வொருவர் உள்ளங்களும் இன்று தோல்மேல் கைபோட்டு நடந்தவரையும் சந்தேகிக்குமளவு மனதளவில் உளைச்சலைக் கொடுத்துள்ளன.

இது ஒரு வகை ‘சைகொலஜிகல் சைபர் அடேக்’ என்றுதான் கூறவேண்டும். ஒருவரை அடித்துக் காயப்படுத்தி புண்படுத்துவதை விட மனமுடையும் இனவாதங்களை விதைத்து – பயத்தை வளர்த்து – சமத்துவத்தை சின்னாபின்னமாக்கி – அன்பை சுக்குநூறாக்கி – பண்பைப் பாழாக்கி அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.

குண்டு வைத்த கூலிப்படைகளும் இன்றில்லை. உடைத்து, தகர்த்து, கொழுத்தி மேய்ந்த வெங்காயங்களுக்கும் பயனில்லை. இறந்தவர்கள் நமது சகோதரங்கள்தான். அழிந்தவை நமது உடைமைகளும், சொத்துக்களுமே!

சேதமான சொத்துக்களின் இழப்பீடுகள் நம் ஒவ்வொருவரின் பணங்களிலுமே அழிந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாக்கப்படுது எமக்கே கேடு! இதை உணராதவர்கள் ‘நாம் இலங்கையர்’ என கூறுவதில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க இச் சம்பவங்களின் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கை ஏற்படுத்தும் மனோநிலை இன்று ஒவ்வொரு இலங்கையர் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. ஒன்றாக தொழில் செய்த மூவினத்திரிடையும் முக்கோண வேறுபாடுகள் உதித்துள்ளன. வியாபாரங்கள், ஏனைய முன்னெடுப்புக்களில் முரண்பாடுகள் விதைந்துள்ளன.

ஊர் மாறி தொழில் புரிந்த பலரிடமும் மன உளைச்சல் விதை போட்டுள்ளன. இவைபோக இரு தலைபட்சமாக சிந்திக்கும் பலரின் சிந்தனைகள் இன்னும் வலுத்துள்ளன.

இவ்வாறு நெரிசல்கள் மிளிரக் காரணம் ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய’ கதை போல ஒரு சில ஊடகங்கள் மேற்கொண்ட இனவாத செய்தி வடிவமைப்புக்களிலும் தங்கியுள்ளது.

பொதுவாக அரசியலுக்கு அப்பால் சமூகம் என்று வரும்போது ‘நெகடிவ் பப்ளிசிடி’ தேடுவது எந்தவொரு ஊடகத்துக்கும், ஊடகவியலாளருக்கும் சுகாதாரமானதல்ல.

தங்கள் இருப்பை நிலைபேறச் செய்வதற்காகவும், தங்கள் அலைவரிசை அல்லது பத்திரிகை அல்லது இணையத்தைப் பார்க்கும் வாசகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் வெறுமெனே ஒரு சமூகத்தை அடகு வைப்பது கிடப்பில் உதித்த அநியாயமாகும்.

ஊடகங்கள் எப்போதும் நடுநிலையோடு, சமாதானத்தை வளர்க்கும் சமூகம் போற்றும் தளமாகச் செயற்பட வேண்டும். அவ்வாறின்றி அத்தனையும் கக்கும் வீர அலைவரிசையாகச் செயற்பட்டால் ஒன்றை விழுங்கி, ஒன்றைக் கடித்து, பலதை அமிழ்த்தி, பலதை வெளியாக்கும் நச்சுப் பாம்பாக படமெடுக்கக் கூடாது.

தைரியமாகச் சொன்னால் அத்தனையும் சொல்லுங்கள், அழுத்தமாகச் சொல்லுங்கள்…. அவ்வாறின்றி அரைகுறை கோஷங்களால் சமூகத்தை சுக்கு நூறாக்கிய பாவம் குறித்த சில நபர்களை வலம் வந்துகொண்டே இருக்கும்.

சிறு குழு செய்யும் அநியாயங்களுக்கு முழு சமூகமும் பலிக்கேடயமல்ல! இந்நாடு மூவின மக்களும் ஒன்றெனக் கலந்து அவரவர் உரிமைகளை அரசமைப்பு ரீதியாகப் பெற்று அமைதியாக வாழ்கின்ற தீவு.

இங்கு சமூகத்தில் சடுகுடு விளையாட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதும், சமூகத்தின் மேல் இழுக்கைக் கொண்டுவர சில சதியாளர்கள் முனைவதும், சமூகத்தை சுக்குநூறாக்க வெளிநாட்டு சதிகள் உள்ளாடுவதும் வெறும் கோழைத்தனம்!.

இது எமது தாய் நாடு! சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என நான்கு மதத்தவர்களும் பின்னிப் பிணைந்து ஒற்றுமைக் கரத்தைப் பலப்படுத்த வேண்டிய தருணம் இது! இனவாத மாயைக்குள் சிக்கி முழு நாட்டையும் சுக்குநூறாக்குவது வெகுலித்தனமானது.

எதுவாக இருப்பினும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு எனும் நாமம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது நாடு, எமது சகோதரங்கள் எனும் உணர்வு இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் மிளிர வேண்டும்.

இலங்கை நம் நாடு! எழில்மிகு இந்த நாட்டை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து அனைவரும் பாதுகாப்போம்!!

– கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *