ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையால் நாடாளுமன்றத்தில் இன்று அமளிதுமளி! – நாளை முற்பகல் 10.30 மணிவரை சபை ஒத்திவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் – எதிரணி தரப்பினரிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. அத்துடன், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து நாளை முற்பகல் 10.30 மணிவரை சபை நடவடிக்கைகளைச் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா அல்லது தெரிவுக்குழுவை அமைத்து அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதா என்று கருத்துக் கோரப்பட்டது. இதனையடுத்தே ஆளும் – எதிரணி தரப்பினரிடையே கடும் சொற்போர் மூண்டது.

முஜிபுர் ரஹ்மான்

“நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது மிகவும் முக்கியான ஒன்று. சுமார் 300 பேரின் சாவுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தேடிப் பிடிக்க வேண்டும். அதனால் தெரிவுக்குழுவை புறந்தள்ளிவிட்டுச் செல்ல முடியாது.

அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனைத் தெரிவுக்குழுவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதனைச் செய்யாமல் உண்மையான கொலையாளியைக் காப்பாற்றவே தற்போது முயற்சிக்கிறார்கள்.

உண்மையான கொலையாளிகளுடன் பொது எதிரணியினருக்கு டீல் உள்ளது. தமது வழக்குகளை மறைத்துக்கொள்ள டீல் போட்டுள்ளார்கள். ரிஷாத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மூலம் விசாரணைகளைத் திசைதிருப்ப இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

இந்த நாட்டில் போராட்டங்களை நடத்தி அடிப்படைவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்ட முயற்சிக்கின்றார்கள். சபாநாயகரே அதற்கு இடமளிக்க வேண்டாம்.

தெரிவுக்குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது அவசியம்” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச

“நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் அமைச்சர் ரிஷாத்தும் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்க உதவும். அதேவேளை, மக்களின் சந்தேகத்தையும் தீர்க்க முடியும்.

சபாநாயகரே இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். இரண்டு நாள் விவாதத்தை நடத்த சபாநாயகர் திகதி அறிவிக்க வேண்டும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சபைக்குக் கொண்டுவரப்பட்டு அது தொடர்பான விவாதம் குறித்து இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்

எனவே, இதை ஒரு விவாதப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்காமல் பிரேரணையை விவாதிக்கத் தீர்மானிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

பிரதமர் ரணில்

“அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாங்கள் விவாதம் நடத்த எதிர்க்கவில்லை. எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் பிரகாரம் நாம் முடிவுகளை எடுப்போம். இங்கு விவாதம் ஒன்றை நடத்த யாரும் எதிர்ப்பு இல்லை. இது தொடர்பில் சபாநாயகர் தீர்மானிக்கட்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ரணிலின் உரைக்கு
எதிராகக் கோஷம்

பிரதமர் ரணிலின் உரைக்கு எதிராகப் பொது எதிரணி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். குற்றவாளியைக் காப்பாற்றவா நாடாளுமன்றத் தெரிவுக்குழு? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர். ரிஷாத் மீது பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம் வேண்டும் எனவும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அமீர் அலி

“நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை உடன் நியமியுங்கள். அமைச்சர் ரிஷாத் குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள். இப்போதெல்லாம் செப்பு பற்றிப் பேசுகிறீர்கள். செப்பு வழங்குமாறு கடிதம் கொடுத்தவரே அந்தப் பக்கம்தான் உள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?

இது அமைச்சருக்கு எதிரான பிரேரணை அல்ல. இது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு பிரேரணை என்றே கருதுகின்றோம்” என்று இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இதன்போது தெரிவித்தார்.

எதிரணி கூச்சல், குழப்பம்;
தெரிவுக்குழு நிறைவேற்றம்

ஆனால், பொது எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றனர். சபை அமர்வுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடன் கூட்டி நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் திகதியை அறிவிக்குமாறு சபாநாயகரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொது எதிரணியினரின் கோரிக்கைக்கு சபை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நாளைதான் கூட்டத்தை நடத்த முடியும் எனவும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, “நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கான திகதி நாளை நிச்சயம் அறிவிக்கப்படும்” என்று சபாநாயகர் கூறினார்.

இதனால் கடுப்பாகிய பொது எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.

கடும் அமளிதுமளிக்கு மத்தியில் தெரிவுக்குழு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்ற அமர்வு நாளை முற்பகல் 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *