ரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு!

“பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. சில தீவிரவாதிகளின் மோசமான நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகமே புண்பட்டுப் போயிருக்கும் இச்சமயத்தில் இந்த நாட்டின் மற்றொரு சிறுபான்மையினமான தமிழர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பம் வசமாக வாய்த்திருக்கின்றது என்று கருதி, ‘விழுந்த மாட்டில் குறி சுடும்’ வேலையைத் தமிழர்கள் முன்னெடுக்கக்கூடாது.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இன்றைய (21) ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்து வாக்களிப்புக்கு விடுவது என்பது குறித்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவிருக்கின்றது.

ஏற்கனவே, இந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. பெரும்பாலும் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருவதும், வாக்கெடுப்புக்கு விடப்படுவதும் தவிர்க்க முடியாதவையாக இருக்கும் என்றே தோன்றுகின்றது.

அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றது என்பதற்காக அவர் பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதோ அல்லது பிரேரணை தோற்கடிக்கப்பட்டது என்பதற்காக அவரை அப்பதவியில் தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும் என்பதோ அல்ல.

அமைச்சர் பதவி வகித்தல் என்பது ஜனாதிபதி, பிரதமரின் கூட்டு முடிவில் தங்கியுள்ளது. நாடாளுமன்றின் பின் கதவால் பிரதமரான மஹிந்த ராஜபக்சவின் அரசு, அதன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆட்சியில் நீடித்த விநோதம் இந்த நாட்டில் நடந்துதானே இருக்கின்றது…?

சரி, அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழர் தரப்பு – முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது?

இன்னொரு சிறுபான்மையினத்தவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் கூட்டமைப்பு எப்படி நடந்து கொள்ளப் போகின்றது?

அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் போன்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வேறு சில கூட்டமைப்பு எம்.பிமாரும் இந்த நிலைப்பாட்டில் இருக்கக் கூடும்.

வன்னி நிர்வாகம் தொடர்பாக, குடியேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாத்துக்கும் கூட்டமைப்பின் எம்.பிமாருக்கும் இடையில் பலத்த கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அதனைத் தீர்க்கும் வாய்ப்பாக இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கீழ்த்தரமாக நடந்துவிடக் கூடாது.

சில தீவிரவாதிகளின் மோசமான நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகமே புண்பட்டுப் போயிருக்கும் இச்சமயத்தில் இந்த நாட்டின் மற்றொரு சிறுபான்மையினமான தமிழர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சந்தர்ப்பம் வசமாக வாய்த்திருக்கின்றது என்று கருதி, ‘விழுந்த மாட்டில் குறி சுடும்’ வேலையைத் தமிழர்கள் முன்னெடுக்கக் கூடாது.

1983 ஜூலையில் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கூண்டோடு கொல்லப்பட்டபோதும் இதுபோன்ற பேரினவாத உணர்வெழுச்சி தெற்கில் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதும், இதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. இனவெறுப்புப் பேச்சுகள் நாடாளுமன்றத்தில் ஒலித்தன.

அன்றைய அமிர்தலிங்கத்தையும் இன்றைய ரிஷாத் பதியுதீனையும் ஒப்பிட வேண்டியிருக்கின்றது.

அன்று – அஞ்சாமல் தமிழரின் ஜனநாயகக் குரலாக அமிர்தலிங்கம் ஒலித்தார்.

இன்று – இத்தகைய நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், வெறுப்புணர்வுப் பேச்சுகள் போன்றவை மூலம் ரிஷாத்தை முஸ்லிம்களின் தனித்துவ ஜனநாயகக் குரலாக உயர்த்தி விடும் வேலையைத்தான் செய்யப் போகின்றன.

இந்த நாட்டில், அடக்கி ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மையினத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க வேண்டிய கடப்பாடு தமிழர் தரப்புக்கு இருப்பதாக நினைக்கின்றோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தவறிழைத்தவராகவே இருக்கட்டும். அது குறித்து ஆதாரங்கள் இருந்தால் பொலிஸாரிடம் நேரில் சென்று கையளித்து நடவடிக்கை எடுக்கக் கோருவதுதானே…? நடவடிக்கை எடுக்காவிட்டால், அதை விலாவாரியாக நாடாளுமன்றத்தில் விவரித்து சம்பந்தப்பட்ட விடயத்தை வெளிக்கொணரலாம்தானே?

“இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழு அரசுமே பொறுப்புக்கூற வேண்டும். அதனால் அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு ரிஷாத்தை மட்டும் பொறுப்புக்கூற வைப்பது முறையற்றது. ரிஷாத் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆகவே, ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இருக்கக்கூடிய ஆதாரங்களை ஜனாதிபதியிடம் தெரிவித்து, அவரைப் பதவி நீக்கப் கோர வேண்டும்” என்று ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் கூறுவது சரியானதுதான்.

பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *