தெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன்! – ரணில் திட்டவட்டம்

“எல்லோரும் குற்றம் சொல்கின்றார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை விலகச் சொல்வது முறையானதல்ல. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ரிஷாத் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி விலக்குகின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்ரர் அப்புஹாமி ஆகியோர், “அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை வழங்க வேண்டிய நிலை இருக்கின்றது” எனத் தெரிவித்தனர். அதேசமயம் அமைச்சர் ரிஷாத் தற்காலிகமாகப் பதவி விலகுவது நல்லது என இங்கு பேசிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இவற்றுக்குப் பின்னர் கருத்து வெளியிட்டபோதே பிரதமர் ரணில் தற்போதைய நிலைமைகளை விளக்கினார்.

“அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்போம். அது சுயாதீனமாக ஒரு முடிவைச் சொல்லட்டும். ரிஷாத் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன். அப்படியில்லாமல் கண்டபடி செயற்பட முடியாது. ரிஷாத்தைப் பதவி நீக்கி அரசை ஆட்டம் காணச் செய்வதா அல்லது அரசையும் பாதுகாத்து அவரையும் பாதுகாப்பதா என்பதை முடிவு செய்யுங்கள்” என்று ரணில் கூறினார்.

இங்கு பேசிய இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, தமது கட்சியின் தலைவர் ரிஷாத் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கடும் விசனம் வெளியிட்டார். அத்துடன், எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவிகளை உதறித் தள்ளிவிட்டுப் போகத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *