அரசை விரட்டியடிக்க ஜே.வி.பியும் களத்தில்! – நாளை சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முற்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுத்துநிறுத்தத் தவறிய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்றது.

இந்தப் பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனப் புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர். வெளிநாட்டு அமைப்புகளாலும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கை இந்த அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

அதேபோல் இம்மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசாங்கத்தின் நிர்வாகப் பொறிமுறையும் தோல்வி கண்டுள்ளது என்பது உறுதியாகிவிட்டது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது.

எனவே, இந்த நாட்டை ஆள்வதற்கான தார்மீக உரிமையை, தகுதியை இந்த ஒட்டுமொத்த அரசாங்கமும் இழந்துவிட்டது. எனவே, அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளோம். அது நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படும். இதற்கு ஆதரவு வழங்குமாறு நாம் அனைத்துக் கட்சிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றவாளியெனில் அவர் தண்டிக்கப்படவேண்டும். இராணுவத் தளபதிக்கு அவர் அழுத்தம் கொடுத்திருந்தால் கைதுசெய்யப்பட வேண்டும். பயங்கரவாதிகளையும், கொலையாளிகளையும் பாதுகாக்கும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் கொள்கை ரீதியிலேயே அரசியல் நடத்தி வருகின்றோம். கொள்ளையடித்து நாம் அரசியல் நடத்தவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *