வலிசுமந்த முள்ளிவாய்க்காலின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல்! – இன்று தாயக தேசத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள்

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத – பெருந்துயர் படிந்த, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் தாயக மண்ணில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குருதியில் குளித்த – தமிழ் மக்கள் வேதனையில் துடித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள், கண்ணீர்விட்டுக் கதறியழுது, படையல் படைத்து, ஈகச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தவுள்ளனர். முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் நினைவேந்தலுக்கான ஒழுங்குகள் நேற்று முடிக்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, தமிழர் வாழ்நாளில் கறுப்பு நாள். செங்குருதி தோய்ந்த துக்க நாள். ஈழத்தின் மிகப் பெரிய துயர் படிந்த நாள். முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப் போன தேசத்து உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர்.

இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும் இன்று காலை 10.30 மணியிலிருந்து நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறவுள்ளது. அகவணக்கம், மதகுருமாரின் கொள்கை அறிக்கை, ஈகச்சுடரேற்றல் என்பன இடம்பெறவுள்ளன.

தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆகப் பிந்திய – மிக மோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

முள்ளிவாய்க்கால் தந்த வலியை – அந்தக் கணங்களை வலிமை கொள்ள வைக்கும் கணங்களாக மாற்றுவதற்கு அனைத்துத் தமிழ் மக்களும் இன்று அஞ்சலி செலுத்த அணிதிரளவுள்ளனர்.

“முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றோம். அந்தத் துயர வலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம். எனவே, எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் கப்பலடி மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணிதிரண்டு அஞ்சலிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *