யாழ். பல்கலை மாணவர் தலைவர்கள் பிணையில் இன்று விடுவிக்கப்படுவர்! – சுமந்திரனுக்கு சட்டமா அதிபர் தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களைப் பிணையில் விடுவிப்பதை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் ஆட்சேபிக்காது என சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று மாலை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் விடுதலைப்புலிகளின் படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம், அந்தச் சட்டத்தின் கீழ் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில சட்டவிதிகள், அவசரகாலச் சட்டம், அரசியல் – சிவில் உரிமைகளுக்கான சர்வதேசப் பட்டயச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்குப் பிணை வழங்கும்படி கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனவாயினும், அந்தப் பிணைக் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால், அதனை மீறி பிணை வழங்கும் நியாயாதிக்கம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை எனத் தெரிவித்து, பிணை மனுக்களை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்தக் கைதுகளையும், விளக்கமறியலையும் ஆட்சேபித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து சட்டமா அதிபரை நேரில் சந்தித்தும் அதனை வற்புறுத்தினார்.

அவர் இரண்டு விடயங்களைக் கோரியிருந்தார். ஒன்று – இந்த வழக்கில் விடயம் இல்லாததால் மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்தது – முதலாவது கோரிக்கையை உடனடியாக நிறைவு செய்ய முடியாவிட்டால் குறைந்த பட்சம் மூவரையும் பிணையில் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவி, நேற்று மாலை தொலைபேசி மூலம் ஜனாதிபதிசட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்டார்.

பின்வரும் விடயங்களை சட்டமா அதிபர் அலுவலகம், சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.

1. சட்டமா அதிபரின் முடிவு சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2. மேற்படி மூவருக்கும் எதிரான வழக்குகளை முற்றாகக்கைவிடக் கோரும் சுமந்திரனின் முதலாவது கோரிக்கை இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது. அது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்.
3. மூவரையும் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதிப்பதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று சட்டமா அதிபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான பக்ஸ் மூல பரிந்துரை மேற்று மாலையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
4. மேற்படி நால்வரும் நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒன்று – அரசியல், சிவில் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டம். அந்தச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்படுவோருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்குக் கிடையாது. மேல் நீதிமன்றத்துக்கே உண்டு.

ஆகையினால், இந்த மூன்று பேர் விடயத்திலும் அந்த நான்காவது சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்திய வாசகத்தை நீதிமன்றத்தில் விலக்கிக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகும் பொலிஸ் அதிகாரிக்கு சட்டமா அதிபர் வழிகாட்டல் வழங்கியுள்ளார். ஆகவே இன்று வியாழக்கிழமை இந்த விடயம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது மேற்படி நான்காவதுசட்டம் பற்றிய வாசகம் ‘பி’ அறிக்கையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.

5. மற்றைய மூன்று சட்டங்களின் கீழ் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேகநபர்கள் விடயத்தில் அரசுத் தரப்பு (சட்டமா அதிபர் தரப்பு) ஆட்சேபனை தெரிவிக்காவிடின் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க முடியும்.

எனவே, இன்று வியாழக்கிழமை மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது உங்களின் இரண்டாவது கோரிக்கைப்படி, அவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு நீங்கள் விண்ணப்பித்து நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

– இவ்வாறு சுமந்திரனுக்கு சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் உத்தியோகபூர்வ பதிலை வழங்கினார்.

தமது சார்பில் தமது கனிஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி, மூவர் சார்பிலும் பிணை அனுமதிக் கோரிக்கையை முன்வைத்து அதனைப் பெற்றுக்கொள்வார் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவிக்குத் தெரியப்படுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *