இந்நாட்டில் பயங்கரவாதம் தெற்கிலேயே ஆரம்பித்தது! – அமைச்சர் மனோ சுட்டிக்காட்டு

இலங்கையில் ‘பயங்கரவாதம்’ தெற்கிலேயே முதன்முதலில் ஆரம்பித்தது என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் முன்னெடுப்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘தேசிய வழி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையில் பெருந்தொகையான பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக நிறுவனப் பிரதிநிதிகள், கலைஞர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் பண்டாரநாயக்காவைப் படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். பின்னர் ஆயுதச் செயற்பாடுகள் பயங்கரவாத இயக்கங்களாக அறியப்பட்டு, சிங்களப் பயங்கரவாதம் என்ற பெயரில் தெற்கில் சொல்லப்பட்டு, பின்னர் தமிழ்ப் பயங்கரவாதம் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் சொல்லப்பட்டு, இன்று ஐ.எஸ்.ஐ.எஸ்.என்ற சர்வதேச தொடர்புடன் இஸ்லாமிய பயங்கரவாதமாக சொல்லப்பட்டு வருகின்றது.

ஆகவே, இன்று பயங்கரவாதம் என்பதற்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகள் இந்நாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் கூடவே இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தநிலையில், “இவை இனி போதும், போதவே போதும்” என்று கூறி புதிய தேசிய ஐக்கிய வழியைத் தேடும் காலம் உதயமாகிவிட்டது என நான் நம்புகின்றேன்.

இன்று எமது அமைச்சர் ஒருவர், இந்நாடு சிங்கள பெளத்த நாடு அல்ல எனக் கூறியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுக்க பெரும் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கே எனக்கு முன் உரையாடிய தேரரும் இது பற்றிப் பேசினார். என்னைக் கேட்டால், சட்டப்படி இது பெளத்த நாடுதானே என்பேன். ஏனென்றால் அப்படித்தானே, இந்த நாட்டின் அரசமைப்பில் எழுதப்பட்டுள்ளது? நாம் அரைகுறையாக முடித்து வைத்துள்ள, புதிய அரசமைப்பு வரைபிலும்கூட இதை நாம் பெரும் வாத விவாதத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதை இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் சுமந்திரன் அறிவார் என நான் நம்புகின்றேன்.

நாம் அனைவரினதும் நாடு இலங்கைதான். ஆகவே, நாம் அனைவரும் இலங்கையர்தான். ஆனால், ஏன் நம்மில் ஒரு பிரிவினர் இலங்கையர் என்று கூறுவதைவிட, தம்மை சிங்கள பெளத்தர் என்று வரையறைபடுத்தி அழைக்க விரும்புகின்றனர் என யோசிக்க வேண்டும். அவர்களுக்கு சிங்கள பெளத்தர் என்ற காரணத்தால் விசேட பிரச்சினைகள் உள்ளன. அவற்றினால், பல சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் இருக்கின்றன. அவற்றுக்கு விடை காணும் வரை, இந்தச் சிங்கள பெளத்த வரையறை இருக்கத்தான் செய்யும்.

அதேபோல் இந்நாட்டில் தமிழர்களுக்கும், தமிழர் என்ற காரணத்தால் விசேட பிரச்சினைகள் உள்ளன. பல சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் உள்ளன. இதுபோலவே மத அடிப்படைகளில் இந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் விசேட பிரச்சினைகளும், சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் உள்ளன.

ஆகவே, இந்த அனைத்து சந்தேகங்களுக்கும், பயங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். ஒருவரை ஒருவர் அறிய வேண்டும். அதுவரை, இந்நாட்டில் நாம் இலங்கையர் என்பது கனவாகவே இருக்கின்றது. நமது அண்டை நாடான இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல இனங்கள் வாழ்கின்றன. அவர்கள் மத்தியிலே சண்டை, சச்சரவுகள், பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர்கள் தம் பிரச்சினைகளை கடந்து, “நாம் இந்தியர்” என ஒன்றுப்படுகின்றார்கள். அந்தநிலைமை இங்கே இல்லை. அதை இங்கே உருவாக்க வேண்டும்.

தேரர், தேசிய நல்லிணக்கம் பற்றியும் பேசினார். இந்நாட்டில் நல்லிணக்கம் இருக்கின்றது. அது தோல்வியடையவில்லை. அது தோல்வியடைந்திருந்தால், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியே நாடு பற்றி எரிந்திருக்கும். அப்படி நடக்கவில்லை. ஆனால், 1977, 1983ஆம் ஆண்டுகளில் இந்தநாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, கடை வீதிகள் பெருமளவில் எரிக்கப்பட்டபோது, நாட்டின் அரச தலைவர்களே கலவரங்களைத் தூண்டி விட்டபோது, தமிழர்களாகிய எங்களுக்கு சென்று முறையிடகூட ஓர் இடம் இந்தநாட்டில் இருக்கவில்லை.

இன்று நிலைமை அப்படியல்ல. அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று மக்கள் மனங்களில் கோபம் இருந்தாலும், அது அன்றைய காலகட்டம் போல் வெளிப்படவில்லை. எம்முன் இருப்பது ஒரு பயங்கரவாத பிரச்சினைதான் என்ற தெளிவு மக்களுக்கு இருக்கின்றது. இப்போதுதான் தாமதித்து சில பிரச்சினைகள் அரசியல் தேவைகளுக்காகத் தூண்டிவிடப்படுகின்றன.

இங்கே உரையாற்றிய சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா பல நல்ல கருத்துக்களைச் சொன்னார். அதன்போது முஸ்லிம் மக்கள் தொடர்பில் தாம் உள்ளகமாக விளக்கை அடித்து தமது இனத்துக்குள்ளே தேடிப்பார்க்கப் போவதாக சொன்னார். அது நல்லது. அதை அவர்கள் செய்யட்டும். அதேபோல் இங்கே பேசிய தேரர், “நடந்து முடிந்துவிட்ட பயங்கரவாதப் படுகொலைகள் தொடர்பில், ஜனாதிபதியும் கவலையை பகிர்ந்து கொள்கின்றார். பிரதமரும் கவலையை பகிர்ந்து கொள்கின்றார். அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவலையை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படியானால் நாம் என்ன செய்வது?” என்று கேட்டார். அவரது கேள்வி என் கன்னத்தில் அடித்ததுபோல் எனக்கு இருந்தது. பாதுகாப்பு தொடர்பில் எனக்கு நேரடிப் பொறுப்பு இல்லாவிட்டாலும்கூட, நானும் ஓர் அமைச்சர் என்ற முறையில் கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாகரிக மனோதிடம் எனக்கு இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *