வன்முறையில் ஈடுபட்டால் 10 வருடங்கள் சிறைவாசம்! – பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

சட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சி.பி.விக்ரமரட்ன, அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு நேற்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, இன, மத மோதல்களை ஏற்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யாராவது தொடர்ந்தும் குழப்பைத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்குப் பிணை வழங்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அது மாத்திரமன்றி தேவை ஏற்படின் 10 வருடங்கள் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்

30 வருடப் போரை நிறைவு செய்த பொலிஸ் உள்ளிட்ட படையினாரால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒரு சிறிய விடயம்.

ஆகவே, எவரும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. அவ்வாறு மீறி சட்டத்தைக் கையில் எடுத்தால் அவர்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *